சண்டியர்களின் புதுப்படம்

libya1குடும்ப ஆட்சி நடாத்தும் சர்வாதிகாரி கடாபியை பதவி விலகக் கோரி லிபிய மக்களில் ஒரு பகுதியினர் போராட ஆரம்பித்தனர். இராணுவச் சர்வாதிகாரி சும்மா இருப்பாரா அல்லது தப்பி ஓடுவாரா? பணத்தில் மிதக்கும் கடாபி தனது பலத்தை ஒன்று குவித்து தனக்கெதிரான கிளர்ச்சியை அடக்கத் தொடங்கிவிட்டார். ஆபிரிக்கர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி பணத்தைக் கொடுத்து அவர்களை சண்டையில் முன் தள்ளியுள்ளார். ஆதிகால ஆயுதங்கள் சில வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்களை அழிக்க வானிலும், தரையிலும் தனது படைகளை ஏவிவிட்டார் கடாபி. ஆயுத ரீதியில் பலமடங்கு பலமான கடாபி படைகள் தமது சொந்த மக்களையே கொன்று குவிக்கத் தொடங்கிவிட்டன.

ஊடகங்கள் இந்தச் சமநிலையற்ற யுத்தத்தை தொடர்ச்சியாக படம் பிடித்துக் காட்டின. கடாபி படையால் கிளர்ச்சியாளர்கள் அழிக்கப்படுவதையும், அவர்களுக்கு ஆதரவளித்த பொதுமக்கள் பழிவாங்கப்படப் போவதையும் சுட்டிக்காட்டி இந்த மனித அழிவிலிருந்து யார் காப்பாற்றுவார் என்று கேட்டன.

இதற்குப் பிறகும் பொறுத்திருக்கலாமா? உலகின் எந்தப் பகுதிக்கும் சனனாயகத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவை பிறகு யார் மதிப்பார்கள். ஈராக்கிலும், அப்கானிஸ்தானிலும் ஆப்பிழுத்த குரங்குகளாக இருக்கும் நிலையில் லிபியாவில் அவசரப்பட முடியாது. ஆகவே கூப்பிடு ஐக்கியநாடுகள் சபையை. அமெரிக்காவும் அதன் கூட்டுநாடுகளும் கூப்பிட்ட குரலுக்கு வராமல் ஐ.நா.வுக்கு வேறென்ன பெரிய வேலை இருக்கப் போகிறது.

libya2ஐ.நா.வும், அமெரிக்காவும், கூட்டாளிகளும் கடாபியின் விமானத்தை தடுப்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கும்போதே பிரான்ஸ் லிபியா கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்ததுடன், தனது விமானப்படையையும் லிபியாவுக்கு அனுப்பிவிட்டது. மூத்த சண்டியரை பின்னால் வந்த சண்டியர் தாண்டிப் போவதா. கொஞ்சமும் தாமதிக்காமல் அமெரிக்காவும், எப்போதும் பின்னால் இழுபடும் பிரித்தானியாவும் தமது விமானப்படையையும் அனுப்பி குண்டுமழையும் பொழிய ஆரம்பித்துவிட்டன. கிளர்ச்சியாளர்கள் இருக்கும் Benghazi பகுதிக்கு மேலால் கடாபியின் விமானங்கள் பறந்து குண்டுபோடுவதைத் தடுக்கும் தீர்மானத்தை ஐ.நா. எடுக்க, அமெரிக்காவும், பிரித்தானியாவும் Tripoliயில் குண்டுவீசத் தொடங்கிவிட்டன. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று யாரும் கேட்கப் போவதில்லை.

ஆக மொத்தத்தில் அடுத்த யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. இடங்கள் வேறாக இருந்தாலும் சண்டைக்காட்சியில் ஈடுபட்டிருப்பது அதே கதாநாயகர்கள்தான்.

அப்படியானால் கடாபியால் ஈவிரக்கமின்றி சொந்த மக்கள் கொல்லப்படுவதை அனுமதிப்பதா?

நிச்சயம் அனுமதிக்க முடியாது. ஆனால் இங்கே சட்டிக்குள்ளிருந்து தப்பி நெருப்புக்குள் விழுவதைத்தான் ஈராக்கும், அப்கானிஸ்தானும் நிரூபிக்கின்றன. இந்திய அமைதிப்படையின் இலங்கைக்கான வருகையும் இப்படித்தான் இருந்தது. இருந்த சண்டியர்களிடமிருந்து “காப்பாற்ற” வந்த சண்டியர்களும் அதே அழிவையே செய்தார்கள்.

இந்தச் சண்டியர்களின் ஒவ்வொரு மனிதாபிமானப் படையெடுப்புகளின் பின்னும் அவர்களின் நலந்தான் இருக்கிறது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. இப்போது லிபியா மீதான படையெடுப்பும் இதற்கு விதி விலக்கல்ல.

ஈராக்கின் சதாம் குசேன், அப்கானிஸ்தானின் தலிபான் போல லிபியாவின் கடாபியும் இன்றைய படையெடுப்பாளர்களின் நண்பர்தான். மலிவான விலையில் தரமான எரிபொருளை இந்த நாடுகளுக்கு விற்பவர்தான. இவர்களிடம் ஆயுதம் வாங்கும் வாடிக்கையாளரும்தான். இப்போது எதிரியாக இருப்பது அரசியலில் இதெல்லாம் சகசம் என்பது மட்டும்தானா?

libya3துனேசியாவில ஆரம்பித்து எகிப்தினூடாக மற்றைய வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்குநாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி அமெரிக்காவுக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் உவப்பானதல்ல. ஆட்டம் கண்ட மற்றும் ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் இந்த நாடுகளின் சர்வாதிகாரிகளுக்கும், மன்னர்களுக்கும் உதவுபவர்களும், நண்பர்களுமே இவர்கள்தான். இவர்களது எண்ணெய் வியாபாரத்துக்கு இப்படியான சர்வாதிகாரிகள் இருந்தால்தான் ஒருகை வியாபாரம் செய்யலாம். அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த நாடுகளை வைத்திருக்க முடியும். ஐரோப்பாவுக்குள் ஏழை நாடுகளிலிருந்து அகதிகள் வருவதையும் இவர்களைக் கொண்டே தடுத்து வர முடிந்தது.

துனேசியாவில ஆரம்பித்த மக்கள் எழுச்சியில் ஏனோதானோவென்றிருந்த சண்டியர்கள் தமது நெருங்கிய நண்பரும், இஸ்ரேலின் கூட்டாளியுமான எகிப்திய சர்வாதிகாரி துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளித்தபோதுதான் விழித்துக் கொண்டார்கள். இப்படியே விட்டால் ஒவ்வொன்றாக தங்கள் நண்பர்களை இழக்க வேண்டிவரும் என்பது தெரிந்துவிட்டது. இதைத் தடுக்க இரண்டுவிதமான வழிகளை அமைத்துக் கொண்டார்கள். மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களுக்கெதிரான எழுச்சியை அடக்க உதவுவது. அப்பிடி இப்பிடி இருக்கும் நண்பர்களுக்கு எதிரான எழுச்சியில் பேசாமல் இருப்பது, எழுச்சி பலமடைந்து வெற்றி பெறுமானால் அதற்குள் புகுந்து தமக்கு சாதகமான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவது.

யேமனிலும், பாரெனிலும் நடைபெறும் மக்கள் எழுச்சி ஆயுத முனையில் கொடூரமாக அடக்கப்படுகிறது. சவூதி அரேபியா பக்கத்து நாடுகளின் அரசைக் காப்பாற்ற தனது படைகளை அங்கே அனுப்பி மக்களை வேட்டையாடுகிறது. இதெல்லாம் ஐ.நா.வுக்கோ அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சுக்கோ மனிதாபிமானப் பிரச்சினையோ சனனாயகப் பிரச்சினையோ இல்லை. கடாபி மட்டுமே அவர்களுக்குப் பிரச்சினை.

libya4லிபியா மீதான இந்த நாடுகளின் தாக்குதல்களுக்கு அவர்களின் சொந்த நாட்டுப் பிரச்சினையும் பிரதான பங்காற்றுகின்றன. அமெரிக்காவில் சரிந்துகொண்டு போகும் ஒபாமா, பிரான்சில் செல்வாக்கிழந்துள்ள சர்க்கோர்வ்ஸ்கி, பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் கமரூன் என்று ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன.

யப்பான் நிலநடுக்கத்தின் பின்விளைவாக அணு ஆலைகள் கதிர்வீச ஆரம்பித்திருக்கின்றன. இதனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அணு மின்சாரத்துக்கு எதிரான பொதுமக்களின் குரல்கள் பலமடைய ஆரம்பித்திருகின்றன. அணு ஆலைகள் உள்ள நாடுகளில் முதலாமிடத்தில் அமெரிக்காவும் இரண்டாமிடத்தில் பிரான்சும் இருக்கின்றன. Nuclear energy lobbyயின் கூட்டாளிகளான அமெரிக்க, பிரான்ஸ் அரசுகள் இப்படி தமது மக்கள் குழம்புவதை அனுமதிப்பார்களா. அணு மின்சாரத்துக்குப் பதிலாக கடாபியைப் பற்றிக் கதைக்க வேண்டாமா.

அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் நலன்களைக் காரணம் காட்டி கடாபி போன்றவர்களின் அரச பயங்கரவாதத்துக்கும், சர்வாதிகாரத்திற்கும், மன்னராட்சிக்கும் நியாயம் கற்பித்துவிட முடியாது. இதைப் போலவே இவர்களைக் காரணம் காட்டி அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தலையில் மிளகாய் அரைப்பதையும் அனுமதிக்க முடியாது.

2 கருத்து x கருத்து

ஜமாலன்March 27th, 2011 at 18:52

அருமையாக எழுதி உள்ளீர்கள். உங்கள் பதிவுகளை இப்போதான் பார்த்தேன் அதுவும் பேஸ்புக்குகள் வழியாக. சக பயணியாக சந்தித்ததில் மகிழ்ச்சி. மற்ற பதிவுகளையும் படித்துவிட்டு சொல்கிறேன். நன்றாக எழுதுகிறீர்கள்.

Nalliah ThayabharanMay 20th, 2011 at 01:54

ஐ நா விலிருந்து ஆபிரிக்க நாடுகள் அவசரம் வெளியேறுவது அவசியம் !

- நல்லையா தயாபரன்

ஆபிரிக்க நாடுகள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அதற்குப் பலமும், உண்மையான சுதந்திரமும் கிட்டும். கௌரவத்துக்கும், மதிப்புக்கும் ஒரு விலை உண்டு. அதைச் செலுத்த ஆபிரிக்க நாடுகள் தயாரா?

ஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது. ஆபிரிக்க மக்கள் பெரிதும் மாறுபடும் நலன்களைக் கொண்டுள்ளார்கள். உண்மையில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் மூலதனத்தை உள்ளடக்கும் 42 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில் அல்ஜீரியாவும் (16 பில்லியன் டாலர் ), லிபியாவும் (10 பில்லியன் டாலர் ) 62 வீதத்தை வழங்குகின்றன. உப-சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரியதும், அதிக ஜனத்தொகையைக் கொண்டதுமான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்கா என்பவை ஒவ்வொன்றும் ஆக 3 பில்லியன் டாலர்களை மட்டுமே வழங்க சம்மதித்துள்ளன. .

ஆபிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் உரிய விடயங்களை உறுதியாகச் செய்யாமல் எதைத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாதிக்க எண்ணியுள்ளன என்று தெரியவில்லை. அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஐ.நா. வின் உயரதிகாரி சோய் யங் ஜின் எவ்வாறு தன்னை அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவராக எண்ணி நடந்து கொண்டார் என்பதை ஆபிரிக்க மக்கள் நன்கு அறிவார்கள்.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாரா தேர்தலில் வெற்றி பெறவில்லையென்று கூறிவிட்டு, தனது பாரிஸ் பயணத்தின்போது இதற்கு நேரெதிராகப் பேசுகையில், நூறு கோடி ஆபிரிக்கர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், அவர்கள் சார்பில் பேசுவதாகவும் கூறும் இத்தலைவர்களின் நம்பகத்தகவு கேள்விக்குறியாகிறது. ஆபிரிக்க யூனியன் ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாராவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு பழைய எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தமது சொந்தத் தேர்தல் அவதானிப்பாளர்களின் எதிர் அறிக்கைகளை உதாசீனம் செய்யும்போது, தமக்கு மதிப்புக் கிட்டுமென்று ஆபிரிக்க மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக நெருக்கடிக்கு ஒரு சமாதானத் தீர்வு தேடும் சிறிய சாத்தியக்கூறையும் ஆய்வுசெய்யாது, ஆபிரிக்க நாடான லிபியா மீது யுத்தப் பிரகடனம்செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும் .உண்மையில் ஆபிரிக்க நாடுகள் இனியும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதில் அர்த்தமேதும் கிடையாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமமான வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவம் ஒன்று கிடைக்குமென்று வழங்கப்படும் தெளிவற்ற வாக்குறுதிகளைக் குழந்தைத்தனமாக நம்பி நைஜீரியாவும், தென்னாபிரிக்காவும் மேற்குலகம் கேட்கும் எதையும் செய்யக்கூடிய நிலைக்குத் தயாராகவுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பில் எதையும் வழங்குவதற்கு பிரான்சுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை இரு நாடுகளுமே மறந்துவிட்டன. அது சாத்தியமாயின், பிரான்ஸின் முன்னைநாள் அதிபர் மிட்டரன்ட், அவருடைய காலத்தில் அவருடைய நண்பர் ஹெல்முட் கோலின் அதிகாரத்தில் இருந்த ஜெர்மனிக்கு, வெகுகாலத்துக்கு முன்னராகவே ஐக்கியநாடுகள் அமைப்பில் வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்திருப்பார்.

ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான சீர்திருத்தம் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை . ஐக்கிய நாடுகள் அமைப்பை பொறுத்தவரையில் ஒரு விடயத்தைத் திண்ணமாக எடுத்துரைக்க ஒரே வழி சீனாவின் வழிமுறையைப் பயன்படுத்துவதாகும். அனைத்து ஐம்பது ஆபிரிக்க நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அவை திரும்பிச் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இணைய வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் சொந்தக் கூட்டமைப்பு மற்றும் அதிகாரப்படிநிலை காரணமாக இன்று சக்திமிக்க வல்லரசுகளுக்குச் சேவை செய்யும் நிலைக்குச் சென்றிருப்பதாலேயே முழு ஆபிரிக்கச் கண்டத்துக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர ஆசனம் உடனடியாக கிடைக்கவேண்டும், அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பு என்று ஒரு அமைப்பு ஆபிரிக்க மக்களுக்கு தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து ஆபிரிக்க நாடுகள் வெளியேற வேண்டும்.. ஏழைகளுக்கும், பலவீனர்களுக்குமுள்ள ஒரேயொரு ஆயுதம் அஹிம்சா வழிமுறை ஒன்றுதான் . பலவீனர்களை அழித்தொழிப்பதை அடிப்படையாகக்கொண்ட ஓர் உலக நோக்குக்கு ஆபிரிக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு முன்பிருந்தது போலவே தொடர்ந்தும் சுதந்திரமாகச் செயற்படலாம். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பங்குதாரிகள் அல்லவென்றும், ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் குறித்து மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேட்காத நிலையில் ஆபிரிக்க மக்கள் அதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று கூறும் நிலை ஆபிரிக்க நாடுகளுக்கில்லையென்றும் கூறும் ஆறுதலாவது ஆபிரிக்க நாடுகளுக்கு கிட்டும். கடந்த மார்ச் 19ஆந் திகதி சனிக்கிழமை முரித்தானிய தலைநகர் நவக்சுட்டில் ஆபிரிக்க நாடுகள் செய்ததுபோன்று ஆபிரிக்க நாடுகள் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டபோதிலும், ஆபிரிக்க நாடுகள் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, ஆபிரிக்க நாடுகளின் அபிப்பிராயம் உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்ல ஆபிரிக்க மக்கள் மீது குண்டுகள் விழத் தொடங்கின.

இன்றைய நிகழ்வுகள் கடந்த காலத்தில் சீனாவுக்கு நடந்ததை நினைவூட்டுகின்றன. இன்று, லிபியாவில் கலகம் செய்யும் எதிர்ப்பு அரசாங்கமாகிய கட்டாரா அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் சீனாவுக்கு நடந்ததைப்போன்ற ஒரு விடயமாகும். சர்வதேச சமூகமென்று அழைக்கப்படுவது மாவோவின் சீனாவுக்குப் பதிலாக, சீன மக்களின் ஒரே பிரதிநிதியாகத் தாய்வானைத் தெரிவுசெய்தனர். 26 வருடங்கள் கடந்;த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2758ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மனிதர்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவுகட்டுவதற்குச் சகல ஆபிரிக்கர்களும் இத்தீர்மானத்தை வாசிக்கவேண்டும். அதன் சொந்த நியதிகளின்பேரில் சீனா அனுமதிக்கப்பட்டது. சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்படாவிடில், சீனா அங்கத்தவராவதில்லையென்று சீனா உறுதியாகத் தெரிவித்தது. இக்கோரிக்கை வழங்கப்பட்டு, தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குச் சீன வெளிநாட்டமைச்சர் எழுத்தில் பதில் வழங்குவதற்கு மேலும் ஒரு வருடம் பிடித்தது. இறுதியில் இப்பதில் 1972 செப்டம்பர் 29ல் அனுப்பிவைக்கப்பட்டது. அது ஆம் என்றும் சொல்லவில்லை, நன்றி என்றும் கூறவில்லை. மாறாக, சீனாவின் கௌரவம் மதிக்கப்படுவதற்கு அவசியமான உத்தரவாதங்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எடுத்துரைத்தது.

ஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல; வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு; வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும்; போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர். அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும்.

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting