கண்டதையும்… (01.05.2009)

bankerஇன்று தொழிலாளர் தினம்.

இந்த வருடம் உலகத்தின் முதலாளித்துவம் வீங்கி வெடித்திருக்கிறது. இதன் பாதகங்கள் வழக்கம் போல உழைக்கின்ற/வறிய மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. கோடீஸ்வரர்கள் சில இலட்சங்களை இழந்து விட்டதினால், உழைக்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்து அரசுகள் கோடீஸ்வரர்களுக்கு உதவுகின்றன. நிரம்பிய பெட்டிகள் நிரம்பியே இருக்க, பசிக்கும் வயிறுகள் பட்டினியால் செத்துப் போகின்றன.

தங்களிடம் கறந்த வரிப்பணத்தை இருப்பவர்களுக்கே அள்ளிக் கொடுக்கும் அரசுகளை தேர்ந்தெடுத்த / வாழ்வைத் தொலைத்து முதலாளிகளின் பெட்டிகளை நிரப்புகின்ற சாதாரண மக்களிடம் வருடாவருடம் நினைவுகூரப்படும் உழைப்பாளர் தினம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு அதன் அர்த்ததைக் கொண்டிருக்கும்?

##

lankaவக்கிரம்

மிக மோசமான நிலையை அடைந்துள்ள இலங்கை யுத்தம் வேறுவேறான பிரதிநிதித்துவங்களின் வக்கிர/குரூரங்களை அம்மணமாக அவிழ்த்துப்போடுகிறது.

குடும்பத் தாதாக்களுடன் நாட்டைக் கொலைக்களமாக்கியுள்ள மகிந்தாவுடன் இந்தப் போருக்கு ஆதரவு வழங்கும் சிங்கள அரசியல்வாதிகள்/ வெடி கொளுத்தி கொடி பிடித்து மகிழும் சிங்கள தேசியவாதிகளுடன் அவர்கள் காலடியில் கைகட்டி தலையால் சேவகம் செய்யும் தமிழ்குழுக்களும் அப்பாவி மக்களின் சாவில், இழப்பில், அவலத்தில், துன்பத்தில் வெறிக்கூச்சல் போடுகிறார்கள்.

தலைமையைக் காப்பாற்றுவதற்கு / அடுத்த டீல் போடுவதற்கு, தம்முடன் இத்தனை காலம் அத்தனை கொடுமைகளையும் அநுபவித்துக் கொண்டு கூட இருந்த அப்பாவி மக்களையே பாதுகாப்பு அரண்களாக்கி மகிந்தவின் இன அழிப்பு பசிக்கு விருந்தாக்கி வருகிறார்கள் புலிகள்.

ஈழத்தில் புலிப் போராளிகளாகவும்/பொதுமக்களாகவும் பலி கொடுத்து வெளிநாடுகளில் தமிழீழ கொடி நாட்டியவர்கள் இந்தக் கடைசிச் சந்தர்ப்பத்தில் கூட மனிதப் படுகொலைகளுக்கெதிராகவன்றி புலித் தலமையையும்/புலிக் கொடியையும் அங்கீகரிக்கக் கோருகிறார்கள்.

புலிகள் பாசிசம் என்று புலி எதிர்ப்புப் போர்வைக்குள் மறைந்திருந்த கும்பல் மனித அவலத்தை வெறும் கணக்குகளாக்கியும், புலியை அழிப்பதென்றால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதென்று விளக்கம் கொடுத்தும் மகிந்த குழுவின் மலத்தை கேக்காக்கி அழகு பார்க்கிறார்கள். புலித் தலைமையைவிட இவர்களின் குரூரம் மோசமானது.

மனித அவலங்களை சகமனிதர்களாக பார்த்தும்/கேட்டும் தமக்குள் அழுது குளறுபவர்கள் மட்டும் மனநிலை பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

##

electionஇந்தியத் தேர்தல்

இந்தமுறை தேர்தலில் குறிப்பாக தமிழகத்தில் ஈழம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. எதிரி/துரோகி/நண்பர்/கொஞ்சம் கெட்டவர்/மிகவும் கெட்டவர் எல்லாம் ஈழ அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ்ச்செல்வனுக்கு கவிதை எழுதியபோது உருவாக்கப்பட்ட கருணாநிதி ரசிகர் மன்றங்கள் ஈழம் அமைத்துத் தருவேன் என்றவுடன் ஜெயலலிதா ரசிகர் மன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன. வெறும் ஈழமல்ல சிங்கப்பூர் மாதிரி ஈழம் எடுத்துத் தருவோம் என்று பா.ஜ.க சொன்னால் ஜெயலலிதா ரசிகர் மன்றங்கள் பா.ஜ.க ரசிகர் மன்றங்களாக மாற்றப்படும் சாத்தியங்கள் இருக்கவே செய்கின்றன.

ஆளும் கட்சியின் மீதான வெறுப்பை பிரதான எதிர்க்கட்சிக்கான வாக்குகளாக மாற்றுவதாகவே தேர்தல் சனனாயகம் இருந்து வருகிறது. இதனை சொல்லிவிட்டுப் போவதற்கு மேலாக சமூக விரோதிகளுக்கு அரசியல் நியாயம் கற்பிப்பது சமூகப் பொறுப்பில்லை.

வங்கம் – சன்மானமோ, பிச்சையோ இல்லை. அது இந்திய அரசு/அரசியல் பற்றிய பாடம் !

##

kadavulநான் கடவுள்

தனது ஐடியாவைத் திருடி தங்கள் சரக்காக விற்கிறார்கள் என்று ஜெயமோகன், பாலா மீது வழக்குப் போட இன்று ஹிட்லர் உயிருடன் இல்லை.

வறிய மக்களை அங்கவீனர்களாக்கி பிச்சையெடுத்து சம்பாதிக்கும் கும்பல் பற்றிய அதிர்வை ஏழைகளையும், உடல் பாதிக்கப்பட்டவர்களையும் கொல்வதே தீர்வென்ற அதிர்வு ஒன்றுமில்லாததாக்கிவிட்டது.

வருகின்ற தேர்தலில் அகோரிகளை நிற்கவைத்து, வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளாக அனுப்பிவிட்டால் இந்தியாவின வறுமையையும், பிச்சைக்காரர்களையும், உடல் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினையையும் குறிப்பிட்ட சில தினங்களிலேயே தீர்த்துவிடலாம். பாரதம் புண்ணியபூமி ஆகிவிடும்.

அகம்பிரம்மாஸ்மிக்கு ஜே!

2 கருத்து x கருத்து

RoseMay 3rd, 2009 at 09:58

//புலிகள் பாசிசம் என்று புலி எதிர்ப்புப் போர்வைக்குள் மறைந்திருந்த கும்பல் மனித அவலத்தை வெறும் கணக்குகளாக்கியும், புலியை அழிப்பதென்றால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதென்று விளக்கம் கொடுத்தும் மகிந்த குழுவின் மலத்தை கேக்காக்கி அழகு பார்க்கிறார்கள். புலித் தலைமையைவிட இவர்களின் குரூரம் மோசமானது.//

//அங்கு இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை. ஏன்னா, அரச கட்டுப்பாட்டில் வாழ்கிற தமிழர்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கிற தமிழர்களை விட கூடுதலானது. அங்கு தமிழர்கள் பாதுகாப்பாக வாழுகிறார்கள். புலிகளின் பிரதேசங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிற மக்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது உண்மை. ஆனால் அதை இன அழிப்பாக சொல்ல முடியாது. மிகைப்படுத்திச் சொல்லி- மிகைப்படுத்தலையே உண்மை என்று சர்வதேசத்தை நம்பவைக்க லாம் என்ற நப்பாசை எந்த லாபத்தையும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை.

முகாம்களுக்குள்ளும் ஆட்கடத்தல், காணாமல் போதல், தற்கொலை மாதிரியான விடயங்களும் சமயங்களில் நடக்கின்றன. இவை சிலநேரங்களில் மிகைப்படுத்தப்பட்டு பயங்கரச் செய்திகளாகி வெளிநாடுகளுக்கு வந்து கொண்டுள்ளன.
http://www.keetru.com/visai/apr09/suseendran.php //

உண்மையிலேயே இவர்கள் குரூரம் மோசம்தான். எவ்வளவு திமிரா பேட்டி கொடுக்கிறாங்கள். இவங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா

GeorgeMay 7th, 2009 at 14:09

//முகாம்களுக்குள்ளும் ஆட்கடத்தல், காணாமல் போதல், தற்கொலை மாதிரியான விடயங்களும் சமயங்களில் நடக்கின்றன. இவை சிலநேரங்களில் மிகைப்படுத்தப்பட்டு பயங்கரச் செய்திகளாகி வெளிநாடுகளுக்கு வந்து கொண்டுள்ளன.
http://www.keetru.com/visai/apr09/suseendran.php //

புதுவிசைக்கு பேட்டி கொடுக்கும் சுசீந்திரன் போன்ற மாமேதைகளுக்கு சனல் 4இன் நேரடி ஒளிப்பதிவுகளும் மிகைப்படுத்தலாய்தானிருக்கும். மக்களின் அவலங்களைப் பற்றிக் கதைத்தால் இவரைப் போல ஜனனாயகவாதிகளுக்கு மகிந்த, கோத்தபாய போல எல்லோரும் புலிகள்தான். சமாதானம், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடு போன்றவற்றில் சுசீந்திரன் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திவருவதாக ஆதவன் தீட்சண்யாவும் படம் காட்டுகிறார். இதெல்லாம் ஒரு பிழைப்பு.

http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=22197914001

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting