தாக்கத் தாக்க

தமிழ்வலைப்பதிவுகளில் இடம்பெற்றுவரும் தனிமனிதத் தாக்குதல்கள் அண்மைக்காலத்தில் அடுத்த பரிமாணத்தை வந்தடைந்துள்ளது குறித்த எனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதனைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக குறிப்பிட்ட சில பதிவுகளை மட்டும் இங்கே எடுத்திருந்தாலும், எனது கருத்துகள் குறிப்பிட்ட இந்தப் பதிவுகள் குறித்து மட்டுமேயல்ல.

டோண்டு X பெயர் தெரிந்த/தெரியாத பலர்

தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதியப் பெயர்களை அகற்றப்படக்கூடாது என்பதிலிருந்து இஸ்ரேலிய சியோசினத்தை மெய்சிலிர்த்து எழுதுவதுவரை டோண்டுவின் எழுத்துகளுக்குப் பின்னாலூள்ள கருத்தாக்கம் ஆதிக்க சக்திகள்/சாதிகளின் கருத்தாக்கமே என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. இந்த கருத்தாக்கத்தை உடைப்பதற்கு/எதிர்ப்பதற்குப் பதிலாக என்ன நடந்தது/நடக்கிறது? கருத்தைக் காவித் திரியும் தனிநபரைப் போட்டுத் தாக்குவதிலேயே முழுச் சக்தியும் செலவழிக்கப்படுகிறது. கொண்டை, குடுமி என்று தொடங்கி கிழடு, பிணம், சாகப்போகிறது என்று மிதித்து தள்ளுவதில் பெரிமிதமும், பூரிப்பும் கிடைக்கிறது. இங்கே வயது அடிப்படையில் கிழடு என்று தாக்குவதில்கூட யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

டோண்டு என்பவர் வேறு வேறு பெயர்களில் எழுதினால் என்ன நடக்கும்? யாரை? எப்படிச் சொல்லி? அடிப்பது? நபர்கள் வருவார்கள். காணாமல் போவார்கள். அவர்களுக்கு வேறு வேறு பெயர்கள் இருக்கும். ஆனால் அவர்களால் காவித் திரியப்படும் ஆதிக்க/அதிகார கருத்தாக்கம் மட்டும் எந்தக் காயமும் படாமல் தொடர்ந்து உயிர்வாழும். ஆக, இங்கே என்ன அரசியல் செய்கிறோம்? கருத்துகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நபர்களை முன்னால் நிறுத்திவைத்து அடித்து அலசுவதால் நாம் சாதிப்பது என்ன? இதன் பெயர் “பார்ப்பனிய” எதிர்ப்பா?!!

மாலன் X பெயரிலி

மார்க்சியம் பேசும்(!) இந்து ராமின் மகள் அமெரிக்காவில் படிக்கிறார் என்ற பொருள்பட பெயரிலி எழுதியதை வைத்துக்கொண்டுதான் மாலன் தொங்கத் தொடங்கினார். ராமின் மகள் பற்றிய இந்த மேலதிக தகவலை பெயரிலி நோக்கம் எதுவுமின்றி எழுதிவிடவில்லை. நாத்திகம் பேசும் xxx இன் மனைவி/கணவன் கோயிலுக்குப் போகிறார் என்று சொல்லும் மலினமான குதர்க்க அடிப்படையில்தான் இந்தத் தகவல் தரப்படுகிறது. நாத்திகம் பேசுபவரின் மனைவி/கணவன் கடவுள் பக்தியுள்ளவராக இருப்பதில் எப்படி அடுத்தவரின் அரசியல் முரண்படுகிறது? குடும்பம் என்றால் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்க வேண்டுமா? இடதுசாரி அரசியல் பேசுபவரின் குடும்ப உறுப்பினர்கள் அனவரும் இடதுசாரிகளாகிவிடவேண்டுமா? இது திணிப்பு அல்லது சர்வாதிகாரம் இல்லையா? இரு வேறுவேறு நபர்களை குடும்பம் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரின் அரசியல் அடிப்படையில் வைத்து பெயரிலி ஒப்பிட்டது அவரது அரசியல் தவறு.

இதனை அதன் அடிப்படையிலேயே எதிர்கொள்வதற்குப் பதில், தமிழ் அகதிகள் இலங்கை அரசின் கடவுச்சீட்டுடன் தான் வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி வருகிறார்கள் என்று மாலன் தனது அறிவான வாதத்தைப் பதிலாக்கினார். இலங்கைத் தமிழ் அகதிகள் மட்டுமல்ல, அரசியல்/மத வன்முறை, பொருளாதாரக் காரணிகளால் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் ஆபிரிக்க, அரேபிய, கிழக்கைரோப்பிய அகதிகள் என்று எல்லோரும் தங்களை ஒடுக்குகின்ற அரசுகளின் கடவுச்சீட்டுடன்தான் வெளியேறுகிறார்கள். இதற்கும் இந்து ராமின் மகள் அமெரிக்காவில் படிப்பதற்குமுள்ள சம்பந்தம் மாலனுக்கு மட்டும்தான் தெரியும் !

இவ்வளவு தூரம் போவானேன். இந்திய அரசுடன் முரண்படுகின்ற/தங்களை அடையாளப்படுத்தாத இந்திய நண்பர்களும் பிரசாவுரிமை என்று வரும் இடத்தில் இந்தியர் என்றுதான் எழுத முடியும். இதனால் அவர்களது அரசியல் விலைபோய்விட்டது என்றா அர்த்தப்படுத்திக் கொள்வது?

இந்திய அரசின் அரசியலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் அந்த அரசியலை எதிர்ப்பது/எதிர்க்கின்ற வழிமுறை தன்னை மனவருத்தத்திற்குள்ளாக்கிறது என்றும் மாலன் தெரிவிக்கிறார். ஆக, முன்முடிவுகளின் அடித்தளத்தில்தான் விவாதம் அமைக்கப்படுகிறது.

அவரவர் தமது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து கருத்துகளை முன்வைக்கும்போது முரணான அரசியலுடன் முரண்படுவதற்குப் பதிலாக முரண்படும் நபர்களுடனேயே மோதுகின்றனர். இதனால்தான் சீனாவைப் பற்றி அப்பா எழுத, மகள் அமெரிக்காவில் படிக்கிறார் என்று பெயரிலி தொடங்க, அமெரிக்காவில் வீடு வாங்கியிருக்கும் பெயரிலி என்று மாலனால் “விவாதத்தை” தொடர முடிகிறது.

சுகுணா திவாகர் X வளர்மதி

படிப்பு அறிவை அளவுகோலாக வைத்து ஒரு தரப்படுத்தலை செய்யும் வளர்மதியின் வாதப்படி முழுக்கப் படித்து முடிக்காமல் எதையும் எழுதவோ/கதைக்கவோ முடியாது. படிக்காதவர்கள் படித்த மேதைகளின் வாய்/எழுத்து மேதமைகளை வாய் பிளந்து ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.

வளர்மதி குறிப்பிடுவதுபோல “படித்தல்” நிறைய விடயங்களுக்கு உதவுகிறதுதான். அதனால் படிக்காதவர்களை தரம் இறக்குவதா?

சுகுணா திவாகர் குறித்த போலிசெய்தல்/போலியாக இருத்தல் தொடரில் வளர்மதி சுகுணா மீது வைக்கும் குற்றச்சாட்டு சுகுணா அதிகம் படிக்காமல் அதிகம் படித்தவர் போல எழுதுகிறார்/பேசுகிறார் என்பது. சுகுணா படிக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அவர் என்ன முனைவர்/டாக்டர் பட்டத்திற்கு விண்ணபித்திருக்கிறாரா? பின்நவீனத்துவக் கல்லூரி நடத்துகிறாரா? படிக்காமலே அவர் எழுதுவதால் இந்தச் சமூகம் எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது? வளர்மதியின் பதிவின் நோக்கம் சுகுணாவை படிக்கக் கோருவதை மட்டும் நோக்கமாகக் கொண்டதா? அந்த அடிப்படையில் மட்டும்தான் எழுதப்பட்டுள்ளதா?

பிரதிக்குள்ளால் எழுதியவரை வாசிப்பதா? எழுதியவருக்குள்ளால் பிரதியை வாசிப்பதா? எழுதியவரை தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்காதவர்களின் உறவு பிரதியுடன் முடிந்துவிடுகிறது. மற்றவர்கள் பின்பக்கத்தால் உள்ளே வருகிறார்கள். சுகுணா பற்றிய வளர்மதியின் பதிவிலும், வளர்மதி பற்றிய சுகுணாவின் பதிவிலும் இருவருக்கும் மட்டும் இருவரையும் பற்றித் தெரிந்த/தனிப்பட்ட நிகழ்வுகள்/விடயங்கள் வாரி வழங்கப்படுகின்றன. இவர்களைத் தெரிந்திராத எங்களுக்கு இவர்களின் பிரதிகளுக்கப்பால இவர்களைப் பற்றிய அபிப்பிராயம் கட்டமைக்கப்படுகிறது. பின்நவீனத்துவம் குறித்து தீவிரமாகப் பேசும் இருவருமே இதனைச் செய்வது ஆச்சரியமான விடயமே. வளர்மதி இன்னும் ஒருபடி மேலேபோய் ஜாதிப்புத்தி என்று தலைப்பே வைத்து சுகுணாவைத் திட்டமிட்டு குறிவைத்து அடிக்கிறார். படி படி என்று சொல்லும் வளர்மதியின் படிப்பறிவு கற்றுக் கொடுத்தது இதைத்தானோ!

xxxxx

இலக்கியம், அரசியல் என்று எதிலும் விவாதம்/உரையாடல்/விமர்சனம் என்று பல பெயர்களுடன் ஆரம்பிக்கப்படுவது ஒன்றில் தனிநபரைக் குறிவத்தே திட்டமிடப்பட்டுத் தொடங்குகிறது அல்லது தனிநபர் தாக்குதலில் போய் முடிவது ஆரோக்கியமான விடயமல்ல. இது ஏதோ இன்று நேற்றுத் தொடங்கிய பிரச்சினையுமல்ல. இன்றும் தொடர்வது சமூக அக்கறை குறித்த பார்வையில் தெளிவேற்படக் கோருகிறது.

செத்த பாம்பைப் போட்டு அடி அடி என்று அடித்து விட்டு மார் தட்டிக் கொள்கிறோம். எமக்குப் பின்னால் படமெடுத்தாடும் கருநாகம் பற்றிய அவதானம் எங்களிடம் இல்லை.

ஊர் மூலையில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் பீடிக்கு 15 சதம் அதிகம் வைத்து வித்தால் உலகமே அழிந்ததுபோல சண்டை பிடிக்கிறோம். ஏகாதிபத்தியம்/உலகமயமாதம் என்ற சுரண்டல்கள் நாட்டையே உறிஞ்சி எடுப்பதைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டோம்.

தங்கள் சட்டப்பையை நிரப்பிக்கொண்டு நாட்டை சாக்கடைக்குள் வைத்திருக்கும் அரசியல்வாதிகளை/அதிகார வர்க்கத்தை விட்டுவிட்டு தெருவில் துப்புபவருக்கும், காரை நிற்பாட்டாமல் போனவருக்கும் கருட புராணத்தின்படி மரணதண்டனை கொடுக்கும் ஷங்கர்/அந்நியன் போன்ற பார்ப்பனியம் எங்களிடம் வேறுவேறு வடிவங்களில் இருப்பதை எப்போது கண்டுகொள்ளப் போகிறோம்?

அதுவரை செத்த பாம்பை/மண்புழுவை அடி.
உண்மையான எதிராளிகளை விட்டுவிட்டு போற/வாற எல்லோரையும் போட்டுத் தாக்கு.

7 கருத்து x கருத்து

P.V.Sri RanganSeptember 16th, 2007 at 10:23

பொறுக்கி,வணக்கம்!

உங்கள் கட்டுரை பேசும் பொருள் மிகவுஞ் சரியானது.

இதைத்தாம் நாமும் வற்புறுத்துகிறோம்.

எனினும்,தனிமனிதத் தாக்குதலானது குறிப்பிட்ட நபர் சக மனிதரோடானவுறவின் விருத்தியில் அவர்கொண்டிருக்கும் மதிப்பீட்டிலிருந்தே உருவாகிறது.உதராணத்துக்கு டோண்டு இராகவனை எடுத்தோமானால், அந்த நபர் தன் சுயமதிப்பீட்டிலிருந்து தன்னைக் குறித்துத் தான் “வடகலை ஐயங்கார்” என்று குறிப்பிட்டுத் தன்னை மேம் படுத்தவில்லை.அவர் கொண்டிருக்கும் ஆதிக்கச் சாதியின் மதிப்பீட்டிலிருந்து அதைக் காவித் திரிகிறார்.இதை மற்றவர்கள்மீது ஏவித் தானும் தனது சாதியுமே உயர்ந்ததென அவர் குறிப்பிடாததுபோன்றவொரு மாயைத் தோற்றம் உருவாகிறதல்லவா?அவர் வெளிப்படையாகச் சாதியைச் சொல்லும்போது மற்றவர்களைச் சாதிரீதியாகத் தாழ்த்துகிறார்.இது ஆதிக்கச் சக்தியினதும் அதன் நிறுவனமயப்பட்ட பண்பாட்டினதும் வெளிப்பாடாகிறது.இதை நீங்களுமே சொல்கிறீர்கள்.எனவே,டோண்டு என்ற தனி நபர் இங்கே ஒரு நிறுவனமாகிறார்-அதிகாரத்தின்,ஆதிகத்தின் குறியீடாகிறார்.இந்த இடத்தில் அந்த மனிதரின் உடலானது ஆதிகத்தினதும்,பார்ப்பனியப் பண்பாட்டினதும் உடலாகவும் இருக்கும்போது,மீளத் தன்னை வெளிப்படுத்தும் தரணத்தில் தனிமனிதானகச் சொல்கிறது.இங்கேதாம் “டோண்டு இராகவன்”தனிமனிதனென்ற நிலைப்பாடு உடையுந் தரணமேற்படுகிறது.அந்த அரூபமான ஒரு உணர்வு அந்த நபர் கொண்டிருக்கும் அரசியலில் முற்று முழுதாக ஆதிகத்தின் உடலாகவே விரிகிறது.இங்கே, டோண்டுபோன்ற நிலையுள் நானும்,நீங்களும் உட்படுகிறோம்.இந்தத் தரணத்தில்தாம் நாம் எந்தப் பக்கத்துள் எம்மை உருவாக்கி வைத்துள்ளோம் என்ற பேச்சு வருகிறது(அதாவது ஒடுக்குபவர்களுக்கும்,ஒடுக்கப்படுபவர்களுக்குமான உணர்வு நிலையுள்)இத்தகையவொரு உணர்வு நிலையில் நாம் ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிரான குறியீடாகிறோம்.

வெகுன ஊடகத்தில் இந்தவிரு பாத்திரங்களும் மோதும்போது அங்கே”தனிநபர் தாக்குதல்”குறியீடாகிறது.அந்தக் குறியீடு அதிகாரத்துக்கான இரண்டு தளங்கள் மோதும்”பொது நிலையை”அடைவதாகவே நான் கருதுகிறேன்.முகமூடியின் கருத்தின்பால் மிக நுணுக்கமாகக் கவனத்தைச் செலுத்தினால் நிச்சியம் இந்த நிலையைப் புரிந்திட முடியும்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்கூடத் தம்மை அதி உயர் சாதியாக நிறுவியபடி சக மானுடரை வேட்டையாடும் அதிகாரத்தைச் சுவைப்பவர்கள் யார்?

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கிராமத்துள்ளும்-நகரத்துள்ளும் நிலவும் பண்பாட்டு அலகுகளில் எந்த ஆதிக்கம் தன்னை முற்று முழுதாக நிறுவிச் சமூகத்தைக் கூறுபோடுகிறது?

அது இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின்(இந்தியாவென்பதே ஒரு பொய்யான தேசம்,அதுள் பற்பல தேசங்கள் அதிகாரத்தால் கட்டி ஒடுக்கப்படுகிறது வேறு விசயம்) வாழ்வாதாரங்களையும்,மானுட மதிப்பீடுகளையும் சிதறடித்து மக்களை வேட்டையாட வில்லையா?

அந்த வலியுள் தாழ்த்தப்பட்டவன் கிடந்து உழலும்போது அவர்களிடம் நிலவுகின்ற எதிர்புணர்வு எங்ஙனம் வர வேண்டுமென்ற இன்றைய “அம்பிகள்”தமது திமிரின் மூலம் கட்டளையிட முடியுமா?

ஆனால், இதைத்தாம் “பார்ப்பன-பனியா அம்பிகள்” செய்கிறார்கள்!

இதிலிருந்து அவர்கள் சொல்ல வருவதென்ன?

“ஐயோ நாம் மட்டுமா சாதிய அடக்கு முறைகளைச் செய்கிறோம்,மற்றைய சாதிகளும்தாம் செய்கின்றன,பின்பு எம்மை மட்டுமே தாக்குவது சரியா?”-இது அவர்களின் கேள்வி.

இந்தியாவில் வர்ணங்களை எந்த நாய் உருவாக்கியது?

எந்த நாய் மானுடரைக் கூறுபோட்டு ஆள்வதற்காகச் சாதிகளை உருவாக்கி உழைப்பவரை வேட்டையாடியது?

எந்த நாய் இந்து-மனு தர்மத்தைச் சொல்லி மனிதர்களுக்குச் சாதி வெறியூட்டிச் சந்தியில் சாதிக் கலவரத்தைத் தூண்டி அரசியல் செய்கிறது?-எமது கேள்வி.

இதற்கெல்லாம் பொதுவானவொரு பதிலுண்டு எம்மடம்!அதுவே”பார்பனியம்” என்பதன் அர்த்தம்!பிராமணனாக இருந்து மானுடரைத் தாழ்த்துவதும்,வேளாளனாக இருந்து மானுடரைத் தாழ்த்துவதும் வெவ்வேறல்ல.இரண்டுக்கும்(சாதிகள் பல,எனவே இரண்டல்ல…) மூலம் பார்ப்பனியப் பண்பாடும் அதன் வழி நிலவும் அதிகாரமும்,மத நிறுவனமும்.இவைகளால் பாதுகாப்படும் பொருள் வளமே மீளவும் இத்தகைய அமைப்பாண்மைய மேல்மட்டமாக்கித் தன்னையும் இதையும் காக்கிறது.

எனவே, தனிமனிதத் தாக்குதலென்பது சாரம்சத்தில் நிலவும் சமூக முரண்பாட்டின் நீட்சியே.

அது ஒரு குறியீடாய் என்றும் நிலவும்.இதைக் கடப்பதற்கான ஒரு சூழல் இப்போதைக்கு இல்லை.

ஏனெனில், ஆளும் வர்க்கம் தன்னை எவரென்றே இனம் காட்ட முடியாதளவுக்கு இன்று பண்பாட்டை உருவாக்கிப் பொதுமைப்படுத்துகிறது.இங்கே(இந்தியத் துணைக் கண்டத்துள்), எவன்(ள்) எந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வே மழுங்கடிப்பட்டு ஒரு வகையான வர்த்தகச் சமுதாயமாக மாறும்(பார்ப்பனியக் கலாச்சார அடிமைத்தனம்) நிலையிலும்”பார்ப்பனியம்”தன்னை மீள் உருவாக்கஞ் செய்து கொள்கிறது.எனவேதாம், டோண்டு போன்ற பார்ப்பனியர்கள் இன்றும் தம்மை மேல்நிலையோடு பொருத்திக் கொள்கிறார்கள்.இவர்கள் தம்மை உயர்த்தியபடியே மற்றவர்களுக்காவும் மனிதாபிமானம் பேசுவார்கள்.”இப்போது எவன் சாதி பார்க்கிறான்?”என்ற புது வாசகத்தோடு ஐக்கியமாகிய அந்தணப் பெருங்குடிகள் அள்ளிப் போடும் அவதூறு அல்லலுறும் அடிமைகளுக்கு அரிப்பாகவே இருக்கும்.

இந்த அரிப்பு அடிமைத்தனத்துக்கு எப்போது ஆப்பு வைப்பதென்ற எதிர்பார்ப்பில் எதிர்புக் கருத்துக்களாகவும்,தாக்குதல்களாகவும் ஏன் தூஷணமாகவும் விரியலாம்.இன்றைய நிலையில் மனிதனை மனிதன் சாதி சொல்லிக் கீழ்மைப்படுத்தித் தீண்டத்தகதவனாக அவமானப்படுத்துவதே மிகக் கொடுமையான இழிநிலை-தூஷணமோ இல்லை தனிமனிதத் தாக்குதலோ அல்ல!

MathiSeptember 16th, 2007 at 11:32

குடும்பம் என்றால் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்க வேண்டுமா?

iruvarum miga sariyaga kanithirukkirigal.

selvanayakiSeptember 16th, 2007 at 13:04

மிக அருமையான பதிவு. நன்றி உங்கள் எண்ணங்களை வெளிப்படையாகவும், தெளிவாகவும் பதிவு செய்தமைக்கு.

மிக அருமையான இடுகை.

முத்துகுமரன்September 16th, 2007 at 17:16

//செத்த பாம்பைப் போட்டு அடி அடி என்று அடித்து விட்டு மார் தட்டிக் கொள்கிறோம். எமக்குப் பின்னால் படமெடுத்தாடும் கருநாகம் பற்றிய அவதானம் எங்களிடம் இல்லை.//

சரியா சொல்லி இருக்கீங்க.

மிகத்தெளிவாக வந்திருக்கும் நேர்த்தியான பதிவு.

KannanSeptember 16th, 2007 at 19:28

நல்ல இடுகை பொறுக்கி…

இன்னும் தெளிந்தேன்.

லொடுக்குSeptember 17th, 2007 at 01:14

வாவ்! நெத்தியடி!!

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting