மண்

mann1இங்கிலாந்து-இந்தியா-இலங்கை கலைஞர்களின் கூட்டுடன் வெளிவந்துள்ள திரைப்படம் மண். இதுவரை பல கோணங்களிலும் இப் படம் குறித்த விமர்சனங்கள் வந்துள்ளன. இவற்றின் இணைப்புகளைக் கீழே தந்திருக்கிறேன்.

படம் பற்றிய விமர்சனங்களில் மண் திரைப்படம் இலங்கையில் நடக்கும் யுத்தம் பற்றிப் பேசவில்லை, யுத்தமே நடைபெறாத இடமாகக் காட்டப்படுகிறது போன்ற கருத்துகளும் இடம்பெற்றிருந்தன. படத்தை எடுப்பதற்கு இலங்கையரசிடம் பெற வேண்டியிருந்த அனுமதி, இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகள், கதைக்களமான (இயக்குநரின் பிறந்த இடமான) கனகராயன் குளத்தில் படத்தை எடுக்க புலிகளின் அனுமதி மறுப்பு என்று தனது சிரமங்களை புதியவன் தனது பேட்டிகளில் குறிப்பிடுகிறார். ஏர்த் படத்தை இந்தியாவில் எடுக்க முடியாத நிலையில் இலங்கையில் எடுத்த தீபாமேத்தாவைப் புரிந்துகொள்வதைப்போல், மண் திரைப்பட இயக்குநருக்கு மட்டுமல்ல, பங்குபற்றிய கலைஞர்கள் அனைவருக்குமே இருக்கக்கூடிய உயிர் அச்சுறுத்தலை விளங்கிக் கொண்டால் யுத்தத்தை ஏன் படமாக்கவில்லை என்பது போன்ற விமர்சனங்களை வைக்க முடியாது. கனகராயன்குளம் புத்தளமாக இருப்பதும் இதனால்தான் !!!

படத்தின் இயக்குநர் புதியவனின் கருத்துகளை அவரது பேட்டிகளிலிருந்து எடுத்து, அவற்றுடன் படம் பற்றிய எனது பார்வையை எழுதுகிறேன்.

“….இலங்கையில் சினிமாவின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியடையாத காரணத்தால் இந்திய தொழில்நுட்பவியலாளரின் பணி பெறப்பட்டுள்ளது….”-புதியவன்

இந்திய தொழில்நுட்ப உதவியைப் பெறுவதில் பிரச்சினையில்லை. ஆனால் சிங்களப் படங்களின் வளர்ச்சியை இங்கே புதியவன் கண்டுகொள்ளவில்லை. தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, இயக்கம், கதை, நடிப்பு, ஒளிப்பதிவு என்று பல விடயங்களில் சிங்களத் திரைப்படங்கள் கோடம்பாக்கத்தைவிட குறிப்பிட்டுப் பேசக்கூடியனவாக இருக்கின்றன.

“….இதுவரை எந்தச் சினிமாவிலும் தொட்டுச் செல்லாத கதையை மண் தொட்டுச் செல்கிறது. யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியில் சாதி வேறுபாடு, பிரதேசவாதம், பெண்ணியம் போன்ற முரண்பாடான கொள்கைகள் வேரூன்றியுள்ளன. அந்த சமூகத்தை மேலெழும்ப விடாது தடுப்பது இதுதான். இது அவர்களின் இரத்தத்துடன் ஊறிப் போயுள்ளது என்றுகூடச் சொல்லலாம். இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்து பூர்வீக தமிழருக்கும், அங்கு இடம் பெயர்ந்து வாழும் மலையகத் தமிழருக்கும் இடையில் காலம் காலமாக இருந்துவரும் பாரிய சமூகப் பிரச்சனையை இக்கதை சொல்கிறது. இந்த விவகாரம் இதுவரை வெளியுலகிற்குக் கொண்டுவரப்படவில்லை. இவ்வாறான மலையகத் தமிழரின் பாரிய பிரச்சனை முதல் முதலாக இந்த மண் படம் பேசுகிறது…..” -புதியவன்

உண்மைதான். இதுவரை காலமும் தமிழ்த்திரையில் காட்டப்படாத யாழ் சமூகத்தின் இன்னொரு உண்மைத் தோற்றம் இங்கே காட்டப்பட்டுள்ளது. இலங்கையரசின் இனரீதியான ஒடுக்குமுறைக்குள்ளிருக்கும் தமிழ் சமூகம் குறிப்பாக யாழ்சமூகம் தானே ஏனைய சமூகங்களை சாதி, பிரதேசம்.. என்று ஒடுக்குகின்ற சமூகமாக இருந்ததும். இன்றும் இருப்பதும் உண்மையாகும். இங்கே மண் படத்தில் ஒருவித “மட்டுப்படுத்தப்பட்ட” ஒடுக்குமுறைதான் காட்டப்படுகிறது. யதார்த்தமோ இதைவிட கொடுமையானது.

mann2சிறுவர் பாலியல் பலாத்காரம், சிறுபிள்ளைகளை அவர்கள் பெற்றோர்களிடமிருந்து பிரித்தெடுத்து வீட்டு வேலைக்காரர்களாக வைத்திருத்தல், வீட்டில்/கடையில் வேலைக்கு அமர்தப்பட்டிருக்கும் மலையகக் கூலித் தொழிலாளர்களை (சிறுவயதுப் பிள்ளைகளே இதில் அதிகம்) வீட்டு வளர்ப்புப் பிராணிகளை விட மோசமாக நடாத்தியது என்று யாழ் சமூகத்தின் கோரமுகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. பாலியல் பலாத்காரத்தில் சித்திரவதைப்பட்டு இறந்துவிடும் பெண்குழந்தைகளுடன் அவர்கள் பற்றிய தகவல்களையும் “புதைத்து” விடுவதற்கு யாழ் சமூகத்திற்கு உதவியது இனவாத சிங்கள அரசின் காவல்துறைதான்.

இது குறித்த ஒரு பகுதியையேனும் திரையில் காட்ட யோசித்தமைக்காகவும், காட்டியதற்காகவும் புதியவனுக்கு நன்றிகள்.

இத்திரைப்படத்தில் வரும் காட்சியொன்றில், மலையகத் தொழிலாளி நஞ்சேறி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வெள்ளாள நிலவுடமையாளர் மறுக்கிறார். இதே மறுப்பும், அலட்சியமும் ஏனைய கூலித்தொழிளாளர்கள், தலித்துகள், விளிம்புநிலை மக்கள் மீதும் காட்டப்படுகிறது. யாழ் சமூகத்தில் கார்/தொலைபேசி வைத்திருப்பது வெள்ளாள பணக்காரர்தான். ஆஸ்பத்திரிகள், அம்புலன்ஸ் வண்டிகள் அதிகம் இல்லாத/அருகில் இல்லாத ஊர்களில் உயிராபத்தான நிலமைகளில் இவர்களின் வசதிகளைக் கொண்டுதான் உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் உயிருக்குத்தான் சாதி/மத/பிரதேச வேறுபாடுகள் இருக்கிறதே. எத்தனை வறிய மக்கள் இந்த அலட்சியம்/வெறியினால் தங்கள் உறவுகளின் உயிர் தங்கள் கண் முன்னாலேயே பிரிவதைத் துடிதுடிக்கப் பார்த்துக் கதறியழுதிருக்கிறார்கள்.

“….. அடிப்படையில் இது ஒரு காதல் காவியம்தான். தென்னிந்தியாவில் காதல் திரைப்படம் எப்படி பரபரப்பாகப் பேசப்பட்டதோ அதுபோல இந்தக் காதல் கதையும் பேசப்படும்…” – புதியவன்

mann3காதல் திரைப்படத்துடன் ஒப்பிடும்போதே கோடம்பாக்கச் சினிமாவின் பாதிப்பு புதியவனிலும் வெளிப்படுகிறது. ஊரோடும், அந்த ஊர் மனிதர்களோடும் எம்மையும் சேர்த்து வைத்த மண் படம் ஒவ்வொரு பாடல் காட்சியின்போதும் பலவந்தமாகப் பார்வையாளர்களைப் பிரித்தெடுத்து இது சினிமா என்று காட்டுவது இயக்குநரின் தோல்வியும், பலவீனமும்தான். அசல் கோடம்பாக்கத்து கதாநாயகி போல மண் நாயகிக்கும் நகைகள், பரதநாட்டிய உடை… என்று ஒரு மோசமான பிரதிபண்ணலில் இருந்த ஒரே ஒரு ஆறுதல் கனகராயன் குளத்தில் கட்டிப்பிடித்த கதாநாயகனும், நாயகியும், சிட்னியிலோ, நியூயோர்க்கிலோ வந்து மிச்சப் பாட்டுக்கு ஆடாதது மட்டும்தான். சமூகப் பிரச்சினையைத் துணிந்து கையில் எடுத்த இயக்குநர் அவரது அடுத்த படங்களில் இப்படியான விசப்பரீட்சை செய்யாமலிருக்க வேண்டும். படத்தின் முதல்பாதிக் காட்சிகள் சில பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் காட்சிகளை நினைவூட்டுகின்றன. பாபிக்கியூ பாடலும், நாயகனும், நாயகியும் “படுக்கும்” பாடலும் எதையோ நினைத்து எதுவோ சூடு போட்டுக்கொண்டமாதிரி இருக்கிறது. நாயகியின் பெற்றோரின் திருமணநாள் “புரட்சி” பாடல் படுசெயற்கையாகத் திணிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான பாடல்/பின்னணி இசையும் இந்திய சினிமாவைப் பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது.

படத்தின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பான அம்சங்களில் சில-
படத்தின் கதாபாத்திரங்கள் எந்த ஒப்பனையுமில்லாமல் இயற்கையாகவே இருப்பது.
(ஒன்றிரண்டு நடிகர்களைத் தவிர) இயல்பான உரையாடல், மொழி.
மண் இவர்களின் முதலாவது திரைப்படம் என்பதை நம்பமுடியாதவாறு ஊரின் மனிதர்களாகவே மாறிவிட்ட நடிகர்கள். குறிப்பாக, கதாநாயகியும் அவரது தோழியும்.
ஒரு கிராமத்தை அப்படியே கண்முன்னே கொண்டுவந்த ஒளிப்பதிவு.
சலிப்படையாதபடி விரைவாகச் செல்லும் படத் தொகுப்பு.

திரைப்படம் என்பதில் பிரதானமாக இருக்கும் காட்சிகள், பொருட்கள், உடலுக்கான மொழியின் முக்கியத்துவம் மண் திரைப்படத்தில் மிகவும் குறைவாகவும், உரையாடலே படத்தை விபரிப்பதாகவும் இருப்பது திரைப்படம் பற்றிய புரிதலை இயக்குநரிடம் கோருகிறது.

கதையின் இன்னொரு பெரிய ஓட்டை கதாநாயகனின் பாத்திரப்படைப்பு. கதாநாயகியை இவர் உண்மையாக நேசிப்பதாகவே திரைப்படத்தில் காட்டப்படுகிறது. கேவலமாகப் பேசிய நண்பருடன் இவர் அடிபடுகிறார். பின்னொருநாள் பஸ்ஸில் போகும்போது சாராய வியாபரி சாதிகுறைந்த பெண்ணுடனான தொடர்பை விட்டுவிடும்படி “புத்திமதி” சொல்லும்போதும் ஆணித்தரமாக மறுக்கிறார். ஆனால் நாட்டை விட்டுவெளியேறும் நேரத்தில் அதே வியாபரியிடம் அவரின் திட்டத்தின்படியே எல்லாம் செய்ததாக கெக்கட்டம் விட்டுச் சிரிக்கிறார். படத்தின் இறுதியில் நடக்கப்போகும் பழிவாங்கலுக்கு ஒரு “புனிதத்தை” பெற்றுக் கொடுப்பதற்காக இயக்குநர் கதாநாயகன் பாத்திரத்தை முடிவிலல்ல, இடையிலேயே திட்டமிட்டு அநியாயமாகச் சாகடித்துவிடுகிறார்.

“… யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் சினிமாப்படம் எடுப்பதில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை..” – புதியவன்.

பிரதேசவாதம், சாதியம்… என்று யதார்த்தங்களையே புதியவன் காட்டியுள்ளார். அது போலவே சமூகப் பிரச்சினைக்கு மரணதண்டனை, பொட்டுவைத்தல், மண்டையில் போடுதல், தனிமனித தீர்வு என்று ஈழத்தில் யதார்த்தமாக இருக்கும் நிலமையையும் (தனது கருத்தாகவன்றி) காட்டுகிறார் என்றே எடுத்திருக்கலாம் படத்தின் முடிவில் ”உங்களை கும்பிடுவதற்காக உயர்ந்த கரங்களில் துப்பாக்கி ஏந்த நிர்ப்பந்திக்கிறீர்கள்” என்று வந்திருக்காவிட்டால். இங்கேதான் புதியவன் என்ற படைப்பாளியின் சமூகப் பார்வை கடுமையான விமர்சனத்திற்குள்ளாகிறது.

“…சமூக சிந்தனையும் சமுதாய அக்கறையும் கொண்டவனே உண்மையான படைப்பாளி….”

என்று பேட்டி தரும் புதியவனின் சமூகசிந்தனையிலும், சமூக அக்கறையிலும் “மண்” அள்ளிப் போட்டுவிடுகிறது.

mann4“….என்வரையில் மணிரத்தினமோ புகழேந்தியோ எடுக்கும் படத்துக்கும் புதியவன் எடுக்கும் படத்துக்குமிடையில் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறேன். முன்னவற்றை ஒரு சினிமா என்றளவில் பார்ப்பதோடு பின்னதற்கு முட்டையில் மயிர்பிடுங்கிப் பார்ப்பேன்…” என்று வசந்தன் தனது பதிவில் குறிப்பிட்டதைப் போல, இத்தனை நீளமாக மண் பற்றி எழுதுவதற்கு காரணம் புதியவன் குறித்த ஒரு எதிர்பார்ப்பு இருப்பதாலும், (படத்தின் முடிவு குறைத்த கடுமையான விமர்சனத்துடன்) அவரது சமூகப் பார்வை (எடுக்கின்ற சமூகப் பிரச்சினைகள்) நம்பிக்கை தருகின்ற ரீதியில் இருப்பதாலுமே. “மண்” குறித்து பரவலாக வந்துள்ள விமர்சனங்களை கவனத்திலெடுத்து புதியவன் அடுத்த படத்தைத் தருவாரா?

2 கருத்து x கருத்து

[...] ‘மண்’ திரைப்படம் குறித்த பார்வையும், களம் குறித்த விரிவான பகிர்வும்.   [...]

AnonymousMarch 10th, 2007 at 23:57

Singales film also depented from tamilnadu tecnicians.

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting