ஏஜென்ற் ஒரேஞ்ச்

கண்களே இல்லாத குழந்தைகள், கைகளையும் தரையில் ஊன்றியே நடக்கின்ற குழந்தைகள், பிறந்து சில நாட்களில்/மாதங்களில்/வருடங்களில் இறக்கின்ற குழந்தைகள்…. இந்தக் குழந்தைகளின் அவலத்தை அருகில் இருந்து பார்த்துக் கதறிக் கண்ணீர்விடும் பெற்றோர்கள்..

Agent Orange -1இதுவொன்றும் பரபரப்பான கொலிவூட் படமல்ல. மனதை நெகிழ்த்தும் நாவலுமல்ல. இன்றும் வியட்நாமில் கண்முன் காணும் யதார்த்தமான காட்சிகளே இவைகள். வியட்நாம் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அமெரிக்கா பன்படுத்திய இரசாயன நஞ்சுகளின் விளைவுகள்தான் இந்தக் குழந்தைகள். யுத்தம் நடந்து 30 வருடங்கள் போய்விட்டன. யுத்தத்தில் எதுவிதத்திலும் சம்பந்தப்படாத மூன்றாவது சந்ததிக் குழந்தைகளும் இந்த உடல்/உள வதையை அனுபவித்துக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

*

1961 இல் வியட்நாம் மீது அமெரிக்கா ஆரம்பித்த யுத்தம் 1971வரை நீடித்தது. வியட்நாம் மக்களின் வீரம் செறிந்த, தியாகம் நிறைந்த விடுதலைப் போரினால் அமெரிக்கா மாபெரும் தோல்வியைத் தழுவியது. இராணுவபலம், ஆயுத பலம், கூட்டுநாடுகளின் ஒத்துழைப்பு என்று தனது பலத்தில் இறுமாப்படைந்திருந்த அமெரிக்கா வியட்நாம் மக்களின் விடுதலை உணர்வுக்கு முன்னால் திணறியது. நேரடி மோதல்களில் தோல்விகளைச் சந்தித்ததால், தனக்கேயுரிய சதிவேலைகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது. 1961இல் அமெரிக்க சனாதிபதி கெனடியால் இரசாயன நஞ்சை வியட்நாம் போரில் அமெரிக்க இராணுவம் பயன்படுத்துவதற்கான உத்தரவில் கையெழுத்திடப்பட்டது.

ஒறேஞ்ச் நிற தகரக் கொள்கலன்களில் இரசாயன நஞ்சு அடைக்கப்பட்டு வியட்நாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஏஜென்ற் ஒறேஞ் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

வியட்நாம் மக்களின் பயிர்களை அழித்து அவர்களைப் பட்டினி போட்டுக் கொல்வது, நீர் நிலைகளை நஞ்சாக்கி அவர்களைக் கொல்வது, காடுகளில் ஒளிந்திருப்பவர்களைக் கொல்வது என்ற அடிப்படையில் இந்த இரசாயன நஞ்சு பயன்படுத்தப்பட்டது. கம்போடியா, கொரியா, தாய்லாந்து, லாவோஸ் நாடுகளின் மீதும் பயன்படுத்தப்பட்டாலும், வியட்நாமில் தான் முழுக்கவனமும் செலுத்தப்பட்டது. 19 மில்லியன் கலன்கள் நஞ்சு வியட்நாமில் கொட்டப்பட்டது. சுமார் 6 மில்லியன் ஏக்கர் நிலம் நஞ்சூட்டப்பட்டது.

மனித இனத்திற்கு எதிரான இந்த நயவஞ்சகச் செயலைச் செய்துகூட வெற்றி பெற முடியாத அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளான ஒஸ்ரேலியா, கனடா, நியூசீலாந்தும் பலத்த தோல்வியுடன் வியட்நாமை விட்டு ஓடித் தப்பின.

*

போர் முடிந்தும் வியட்நாம் மக்களுக்கு வாழ்வு முழுவதுமாக விடியவில்லை. போரில் அமெரிக்கா பயன்படுத்திய மனித இனத்திற்கு எதிரான இரசாயன நஞ்சுகளின் பாதிப்பு போரின் பின்னர்தான் விஸ்வரூபம் எடுத்தது. இலட்சக்கணக்கில் மக்கள் இறந்தனர். நோய்வாய்ப்பட்டனர். பட்டினியால் மடிந்தனர். நஞ்சூட்டப்பட்ட நிலங்களால் தொழிலை இழந்தனர்.

போர்க் காலத்தில் வாழ்ந்தவர்களின் குழந்தைகள் இறந்து பிறந்தனர். அங்கவீனர்களாகப் பிறந்தனர். குறுகிய காலத்தில் வாழ்வை இழந்தனர். வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. சிறுவர் முகாம்கள் பெருகின. தகுந்த சிகிச்சையின்றி, போதிய உதவியின்றி குழந்தைகள் அவதிப்பட்டனர்.

Agent Orange - 2மூச்சுக்கு மூச்சு சனனாயகம் என்று ஊளையிடும் அமெரிக்காவின் சனனாயகத்தில் நம்பிக்கை வைத்து 80களில் வியட்நாம் அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக யாரும் வழக்குப் போட முடியாது என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. அமெரிக்க இராணுவம் பயன்படுத்திய இரசாயன நஞ்சினால்தான் வியட்நாம் மக்களுக்கு இந்தப் பாதிப்பு என்பதற்கு எந்த அத்தாட்சியுமில்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எந்த ஒரு வியட்நாமியருக்கும் எதுவித நட்டஈடும் வழங்கப்படாததோடு, போரில் பாதிக்கப்பட்டவர்களாக அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை.

ஆனால், வியட்நாம் மீது நஞ்சைக் கொட்டிய/கொட்டும்போது பாதிக்கப்பட்ட அமெரிக்க,ஒஸ்ரேலிய, கனடிய,நியூஸிலாந்த் இராணுவத்திற்கு 1984இல் 180 மில்லியன் டொலர் நட்ட ஈடாக வழங்கப்பட்டது. 1999இல் 20,000 தென்கொரியா மக்கள் ஏஜென்ற் ஒறேஞ்சில் பாவிக்கப்பட்ட நஞ்சைத் தயாரித்த அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப் போட்டனர். 2006இல் 6,800 தென்கொரியர்களுக்கு 62 மில்லியன் டொலர்களை நட்ட ஈடாக இந்த நிறுவனங்கள் வழங்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தென்கொரியா அமெரிக்காவின் நேச நாடாக இருப்பதும், வடகொரியாவைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தென்கொரியாவில் நிலைகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

*
வியட்நாம் போருடன் தனது நஞ்சூட்டும் வேலையை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளவில்லை. அப்பா புஷ்ஷால் ஈராக் மீது தொடுக்கப்பட்ட முதலாவது யுத்தத்தின் போதும், தற்போதைய யுத்தத்தில் இங்கிலாந்தினாலும் இரசாயன நஞ்சு பயன்படுத்தப்பட்டது. ஈராக் இரசாயன நஞ்சு ஆயுதங்கள் வைத்திருக்கின்றது என்ற குற்றச்சாட்டையும் முக்கியப்படுத்தித்தான் ஈராக் மீது அமெரிக்கா-இங்கிலாந்து கூட்டாக ஆக்கிரமிப்பை நடாத்தின என்பதும், இப்போது இந்த யுத்தத்திற்காக தாங்கள் முன்வைத்த காரணங்கள் எல்லாம் பொய்யானவை என்று ஒப்புக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உயிர்கொல்லி ஆயுதங்களைத் தயாரிப்பவர்களும், விற்பவர்களும், பயன்படுத்துபவர்களுமே அதை அடுத்த நாட்டில் தேடி சனனாயகத்தை, உலக சமாதானத்தை நிலைநாட்ட யுத்தம் தொடுப்பதுதான் இந்த நூற்றாண்டின் வேடிக்கை.

*

யுத்தத்தின் மூலம் வியட்நாமுக்குள் நுழையமுடியாத அமெரிக்கா இன்று வர்த்தகம்/பொருளாதாரம் என்று பலவழிகளில் உள்ளே நுழைந்துவிட்டது. தற்போதைய வியட்நாம் அரசும் அமெரிக்காவுடன் கைகுலுக்குவதையே விரும்புகிறது. ஆனால் போரில் பாதிக்கப்பட்டவர்களோ 30 வருடங்கள் கழிந்தும் இப்போதும் சாவுக்கும் வாழ்வுக்குமிடையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

*
இலங்கை, காஷ்மீர், லெபனான், பலஸ்தீனம்…என்று யுத்தங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடாத்துவோர் தமக்கு எதிரானவர்களை அழிக்க எதையும் செய்வார்கள் என்பதை கடந்தகால யுத்தங்களின் சாட்சியங்கள் இன்றும் எம் கண்முன்னால் நின்று எச்சரிக்கின்றன. இன்றைய யுத்தங்களின் பாதிப்பு இன்றிருப்பவர்களுடன் முடிவடையப் போவதில்லை என்பது மட்டுமே தற்போதைய உண்மையாகும்.

3 கருத்து x கருத்து

DJNovember 17th, 2006 at 08:02

நன்றி. நிறையத் தகவல்களோடு எழுதப்பட்டுள்ளது.
……
வியட்நாமியப் போரில் பிரிட்டிஷ் சீமான்களும் ஈடுபட்டிருந்தார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அவர்களின் பங்களிப்பு இல்லையா?

பொறுக்கிNovember 17th, 2006 at 17:46

எனக்கு வாசிக்கக் கிடைத்தவற்றில் பிரிடிஷ் கூட்டாளிகள் பற்றித் தகவல் இல்லை டி.ஜே. எனக்கும் இது ஆச்சரியமாகத்தானிருக்கிறது. மேலதிக தகவல் தெரிந்த யாரேனும் இது குறித்து எழுதலாம்.

S.KalirajOctober 29th, 2008 at 20:50

America is a wonderful country in Imperilism. It is Boss of Imperilism. America think, we can anyone. But vietnam people crush to America’s face. I love them ( Vietnamian people ) . The reason of victory against america, Ho chi Min.

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting