Leon – The Profi

அண்மையில் அடுத்தடுத்து சில தமிழ்ப்படங்கள் நிழலுலகத்தைப் பற்றி வந்திருக்கின்றன. இவற்றை ஹொலிவூட் படங்களுடன் 1:1 ஆக ஒப்பிடுவது பொருத்தமற்றது. ஆனாலும் ஹொலிவூட் படங்களில் இடம்பிடித்த சில விடயங்கள் குறித்துப் பேசலாம்.

Leon – The Profi பார்க்காதவர்கள் இனிப் பார்க்கக்கூடும் என்பதால் படத்தின் முழுக்கதையையும் இங்கே நான் எழுதப் போவதில்லை. படத்தின் குறிப்பிடக்கூடிய அம்சங்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்.

Leon – The Profi படமும் நிழலுலகம் பற்றியதுதான். ஆனால் அது நிழலுகின் வன்முறைகளை மட்டும் பேசாது, அந்த உலகின் சோகங்கள், உறவுகள், நெகிழ்வுகள், வக்கிரங்கள் பற்றியும் பேசுகிறது. அந்த உலகின் மனிதர்களை அவர்களுக்குரிய தளத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது.

லியோன் என்பவன் சிறுவயதில் இத்தாலியிலிருந்து அநாதரவாக அமெரிக்காவுக்கு வருகிறான். அவனுக்கு அடைக்கலம் தருவது நிழலுகத்தைச் சேர்ந்த ரோனி என்ற அமெரிக்கன். ரொனிக்காக கொலைகள் செய்யும் லியோன், பெண்களை, குழந்தைகளைக் கொல்வதில்லை என்ற கொள்கையை வைத்திருக்கிறான்.

லியோனின் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் வசிக்கிறது. அக் குடும்பத்தில், தந்தை போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்புடைவன். தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுபவள். இந்தத் தாய்க்குப் பிறந்த மூத்த மகள் உடல் அழகில் ஆர்வமுள்ளவள். இரண்டாவது பெண்ணான மதில்டா இவர்கள் அனைவராலும் உடல்/உள ரீதியான வன்முறைக்கு உள்ளாகிறாள். அவளுக்குள்ள ஒரே ஆதரவு அவளது கடைசித் தம்பி மட்டுமே.

மதில்டாவின் தந்தையுடன் போதைப்பொருள் வியாபாரத்தில் தகராறு ஏற்பட, அந்த நகர பொலிஸ் மேலதிகாரி அவர்கள் வீட்டுக்கு வந்து எல்லோரையும் சுட்டுக் கொலை செய்கிறான். அந் நேரத்தில் கடைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பிய மதில்டா, பக்கத்து வீட்டு லியோனிடம் – அவனும் பணத்துக்கு கொலைகள் செய்பவன் என்று தெரியாமல் – அடைக்கலம் கோருகிறாள்.

40 வயதுக்கு மேற்பட்ட லியோனுக்கும், 12 வயதேயான மதில்டாவுக்கும் இடையேயான உறவு, அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கின்ற மனிதர்கள் பற்றிப் படம் பேசுகிறது.

சிறுமி மதில்டா தனக்கு லியோன் மீது காதல் வந்துவிட்டதாகச் சொல்கிறாள். குடும்பம்/கணவன்-மனைவி உறவு குறித்து தான் அவனுக்குப் புரிய வைப்பதாகச் சொல்கிறாள். தன்னுடன் ஒரே கட்டிலில் படுக்க அவனை அழைக்கிறாள். சிறிது பிசகினாலும் சிறுவர் துஷ்பிரயோகமாக மாறிவிட/பார்க்கப்படக்கூடிய கதை இயக்குநரின் திறமையால் கவனமாக அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளருக்கு பாலியல் உணர்வு சிறிதளவு கூடத் தோன்றிவிடாதபடி பாத்திரங்கள் திரையில் வாழ்கின்றன, உரையாடுகின்றன. லியோன், மதில்டா இருவரையுமே பார்வையாளர்கள் சிறுவர்களாகவே ஏற்றுக்கொள்வதால் இது சாத்தியமாகிறது. மதில்டாவுக்கும், லியோனுக்கும் இடையிலான உறவு மிக இயல்பாகவும், மென்மையான கவிதை போலவும் சொல்லப்படுகிறது.

தான் வளர்ந்த சூழலில், மாதிரி “நல்ல” குடும்பத்திற்குரிய அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையில் மதில்டா உலகே வெறுத்துப் போய் வெறுமையாக இருக்கிறாள். “உலகமே இவ்வளவு மோசமானதா? அல்லது குழந்தைகளின் வாழ்வு என்றாலே இவ்வளவு கடினமானதா?” என்று அவள் லியோனைப் பார்த்துக் கேட்கிறாள். மதில்டாவின் கேள்விக்குப் பதில் இல்லாமல் அவளைத் துயரத்துடன் பார்த்துவிட்டுப் போய்விடுகிறான் லியோன். ஏனெனில் அவனும் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவன்.

நிழலுலகத்தில் வாழும் குழந்தைகள் தங்கள் வயதையொத்த குழந்தைகளுக்குரிய சூழலில் வாழ முடிவதில்லை. குழந்தைக்குரிய கவனிப்பு, விளையாட்டு, நெருக்கமான குடும்ப உறவுகள் எதுவுமின்றி, அசாதாரண சூழலில் வாழ வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. தங்களது சூழல் கற்றுக் கொடுப்பதே அவர்களுக்கு உலக அனுபவமாகிறது. இந்த விடயத்தை இத் திரைப்படம் மிகவும் நுணுக்கமாகவுகம், இயல்பாகவும் காட்டுகிறது. நிழலுலக வாழ்க்கை வாரிசுகளுக்கும் தொடர்வதற்கு அவர்கள் வாழும் சூழல் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது படத்தில் காட்டப்படுகிறது.

12 வயதேயானாலும் தான் வாழ்ந்த சூழலிலினால் 30/40 வயசு “பெரிய” மனிசிக்குரிய பக்குவத்தை மதில்டா பெற்றுக்கொள்கிறாள். குடும்ப வாழ்க்கை பற்றிய அவளது புரிதல் மூலம் இது காட்டப்படுகின்றது. 40 வயதானாலும் தான் இழந்துபோன சிறுவர் பிராயத்திற்குரிய 10/15 வயசு மனோபாவத்திலேயே லியோன் இருக்கிறான். பால் குடிப்பதும், காட்டூன் படங்கள் பார்ப்பதும், திரையரங்கில் பிடித்த நடிகர் தோன்றும்போது பரவசமடைவதும் என்று அவனது நிலமை காட்டப்படுகிறது.

அவர்களின் வழமைக்குரிய உலகங்கள் மாற்றப்பட்ட நிலையில், அவர்களது உணர்வுகளும், தன்மைகளும், உறவுகளும் வழமையை மீறி நிற்கின்றன. தங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வெவ்வேறு மனிதர்களாக வாழும் அவர்களை அவர்களாகவே பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளுவது படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

கதையின் பாத்திரங்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களின் குணங்கள் என்பவற்றை இயல்பாக அமையும் காட்சிகள் காட்டுகின்றன.

எந்த ஒரு உறவுமின்றி, தனது வீட்டில் தன்னந்தனியனாக வாழும் லியோன் தனது நண்பனாக ஒரு செடியை மட்டும் வளர்க்கிறான். அதற்குத் தண்ணீர் ஊற்றுவதும், சுத்தம் செய்வதும், அழகு பார்ப்பதும் அவனுக்குள்ளிருக்கும் மனிதன் ஒரு உறவை வேண்டி நிற்பதைக் காட்டுகிறது. படத்தின் முடிவுவரை அவன் அச் செடியைக் கைவிடவேயில்லை. படத்தின் முக்கிய பாத்திரமாக அச்செடியும் அமைகிறது.

வாழ்க்கை எந்தவித மாற்றமுமின்றி ஒரேமாதிரியாகப் போய்க் கொண்டிருப்பதை தினமும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதும், யன்னலுக்கு வெளியில் வைப்பதும், இரவில் திரும்ப எடுத்து உள்ளே வைப்பதும், கதிரையில் உட்கார்ந்தபடி நித்திரை கொள்ள்வதும் என்று திரும்பத் திரும்பவரும் ஒரே காட்சிகளே தெரிய வைக்கின்றன.

இப் படத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு சமூகத்தின் குற்றவாளிகளாகப் பார்க்கப்படாத குற்றவாளிகளைச் சுட்டிக் காட்டுவதாகும். விளிம்புநிலை மனிதர்களை மட்டும் குற்றம் புரிபவர்களாகக் காட்டாமல், அவர்களை மனிதர்களாகவும் காட்டும் அதேநேரம், அவர்களைத் தண்டிக்க அரசால் உருவாக்கப்பட்ட பொலிஸ், நீதிமன்றங்களே பிரதான குற்றவாளிகளாக, மனிதாபிமானவற்றவர்களாகக் காட்டப்படுகிறது. படத்தின் முடிவில் நிழலுலக மனிதர்கள் மீது அநுதாபமும் அல்லது அவர்களைப் புரிந்து கொள்ளலும், அரச/பொலிஸ்/நீதி நிறுவனங்கள் மீது பார்வயாளருக்கு வெறுப்பும் ஏற்படுகிறது.

உண்மையான அதிகாரவர்க்க கிறிமினல்கள் தங்கள் கைவசமுள்ள அதிகாரங்களால் தப்பிப் பிழைத்துக்கொள்கிறார்கள். இவர்களின் வளமான வாழ்வுக்காக விளிம்புநிலை மனிதர்கள் தங்கள் வாழ்வையே தொலைக்கின்றார்கள்/அழிக்கின்றார்கள்.

அதிகார/ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கான அரசியல் என்பது பொருளாதாரத்தை அவர்களை நோக்கிக் குவிப்பதையும் அதைப் பாதுகாப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக இவர்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் மனிதர்களின் உயிர்வாழ்தலுக்கான சூழலை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பொருள் உள்ளவர்-பொருள் இல்லாதவர் என்ற சமூககங்களுக்கிடையேயான பிளவு இன்னும் அகலப்படுத்தப்படுவதன் மூலம் விளிம்புக்குத் தள்ளப்படும் மனிதர்களின் தொகையும் அதிகரிக்கிறது. இன்றைய அதிவேக வர்த்தக வளர்ச்சி, திறந்த பொருளாதாரம், உலகமயமாதல் என்று இராட்சச வளர்ச்சியில் மனிதர்கள் தங்கள் மனிதத்தைத் தொலைக்கவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பாரிய சுரண்டலுக்குள்ளாகி, இருக்கின்ற சொற்பத்தையும் இழக்கின்றார்கள். இந் நிலமையில் தாம் உயிர்வாழ்வதற்காக எதையும் செய்யக்கூடிய நிலக்குத் தள்ளப்படும் மனிதர்களே உலகப் பொருளாதாரத்தின் விளைபொருட்களாகிறார்கள்.

நிழலுக மனிதர்களின் வெளிச்சத்திற்கு வராத வாழ்க்கையை ஒரு சில திரைப்படங்கள்/சில பாத்திரங்கள் மூலம் காட்டிவிட முடியாதுதான். ஆனால் Leon – The Profi சில கேள்விகளையேனும் எழுப்புவதும், நிழலுலக மற்றும் விளிம்புநிலை மனிதர்களைப் புரிந்து கொள்ள உதவுவதும், உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்ட முயற்சிப்பதும் வரவேற்கத்தக்கது.

பாத்திரத் தேர்வும் பொருத்தமாயுள்ளது. மொறோக்கோவில் பிறந்து, பிரெஞ்ச் பிரசாவுரிமையைக் கொண்ட Jean Reno என்ற நடிகர் லியோன் பாத்திரத்திற்கு அற்புதமாகப் பொருந்துகிறார். வாழ்வில் வெறுமையாக இருப்பதையும், நினைவுகளில் இன்னும் சிறுவனாக இருப்பதையும், உணர்வுகளைக் காட்டத் தெரியாதவ்னாக இருப்பதையும் அழகாக வெளிப்படுத்துகிறார். தற்போது Star Wars மூலம் பிரபலமடைந்திருக்கும் Natalie Portman இன் முதலாவது படம் இது. 12 வயதில் அதே வயதுப் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நான் பார்த்த அவரின் படங்களில் அவரது திறமையைக் கண்டது இந்தப் படத்தில்தான் என்பேன். சோகம், பயம், சந்தோசம் எல்லாம் கலந்து தனது குழந்தை முகத்தில் காட்டுகிறார். பொலிஸ் மேலதிகாரியாக வரும் Gary Oldman நடிகரும் தனது பாத்திரத்தை அருமையாகச் செய்துள்ளார்.

படத்தில் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் பிரதான இடம் பிடிக்கின்றன.

நிழலுலகம் பற்றிய பதிவு:
http://urpudathathu.blogspot.com/2005/12/101.html

திரைப்படம் பற்றிய விபரம்:
http://www.imdb.com/title/tt0110413/

—————————————————————————

இதைப் போன்ற சில பதிவுகள்

2 கருத்து x கருத்து

டிசேJuly 11th, 2006 at 14:20

நல்லதொரு அறிமுகம். நன்றி.
….
புலம்பெயர்ந்தவர்களின் நிழலுலகைப் பதிவு செய்தது என்றவகையில் மைக்கலின், ‘ஏழாவது சொர்க்கம்’ குறுநாவல் முக்கியமானது (பதிவுகள் இணையத்தளத்தில் தொடராக வெளிவந்திருந்தது). சென்ற வருடம் வெளிவந்த காலம்’ இதழில் பார்த்திபன் எழுதிய கதையும் (பெயர் இப்போது நினைவினில்லை) கிட்டத்தட்ட இந்தப்படம் கூறுகின்ற கதையின் கருவை தொட்டுச்செல்வதாய் நினைக்கின்றேன் (அங்கேயும் போதைமருந்து கடத்தும் ஒருவனும், பாலியல் தொழிலுக்காய் கடத்தி வரப்பட்டு அவனிடம் அடைக்கலம் கேட்கின்ற ஒரு பதின்மவயதுப் பெண்ணும் முக்கிய பாத்திரங்களாகின்றனர்.) சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்யப்படும் அல்லது முக்கிய விடயமாகத் திணிக்கப்படும் கதைச்சூழலைத் தவிர்த்து மிக இயல்பாய் அவர்களுக்கிடையிலான உறவை பார்த்திபன் காட்சிப்படுத்தியிருப்பார்.

பொறுக்கிJuly 12th, 2006 at 12:19

தகவல்களுக்கு நன்றி டிசே

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting