பதில் தாக்குதல் அரசியல்

தென்னிலங்கை இராணுவத் தலைமையலுவலகத்தில் புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடாத்தினார்கள் என்பதைக் காரணமாக வைத்து, திருகோணமலையில் தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை அரசு வான், கடல், தரைவழித் தாக்குதல்களை நடாத்தியது. பரவலாக தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்ட பின், தென்னிலங்கையில் தலை அகற்றப்பட்ட முண்டங்கள் காணப்பட்டன.

தனது தாக்குதல் புலிகளுக்கான பதில் நடவடிக்கை என அரசு நியாயப்படுத்திக் கொண்டது. இந்தத் தாக்குதலையிட்டு கவலைப்படுவதாக மட்டும் சர்வதேசநாடுகள் தெரிவித்துக் கொண்டன. புலி எதிர்ப்பை மட்டும் அரசியலாகக் கொண்ட தமிழ் ஊடகங்களும் அரச படைகளின் தாக்குதலை பதில் தாக்குதலாகவே நியாயப்படுத்திக் கொண்டன.

பதில் தாக்குதல் என்பவை வெறும் பழிக்குப் பழி நடவடிக்கைள் மட்டும் அல்ல. இவை இந்தத் தாக்குதலை மேற்கொள்பவர்களுடைய அரசியலின் நீட்சியே.

உலக வர்த்தக வலயத்தின் மீதான அல்கைடா தாக்குதலுக்கான பதில் நடவடிக்கைதான் ஆப்கானிஸ்தான் மீதான யுத்தம் என்று அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியது. உலக வர்த்தக வலயத் தாக்குதல் நடந்திராவிட்டால்கூட ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு வேறொரு காரணம் காட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும். இங்கே பதில் தாக்குதல் என்ற பெயரில் எண்ணெய் குழாய் திட்டம், மத்திய ஆசியாவில் இராணுவ நிலைகள் என்ற அமெரிக்காவின் அரசியலே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பலஸ்தீனத்தில் ஹமாஸின் வெற்றிக்குப் பின் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பியநாடுகள் தாம் வழங்கிய நிதியுதவியை நிறுத்திவிட்டன. அவைகள் முன்வைத்த திட்டங்களையும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே அவர்களது பதில் தாக்குதலின் காரணம்.

பதில்தாக்குதல்கள் குறிப்பிட்ட குழு/அரசு மீதான தாக்குதலாகத் தோற்றம் தந்தாலும், அடிப்படையில் அந்த குழு/அரசு சார்ந்த மக்களைப் பழிவாங்குவதாகவும், பயமுறுத்தி அடிபணிய வைப்பதாகவும், தமது அரசியல்/பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுபவையாகவுமே இருக்கின்றன.

இராணுவத் தளபதி மீதான தாக்குதலுக்குப் பதிலாக புலிகளின் தலைமையகம்/நிர்வாகம் உள்ள கிளிநொச்சி மீது கிபீர் விமானங்கள் குண்டு போடவில்லை. தரைத் தாக்குதலை நடாத்தவில்லை. மாறக அரசு பதில்தாக்குதலுக்குத் தேர்ந்தெடுத்த இடம் கிழக்கு மாகாணம், திருகோணமலையே.

இன்று இந்தியா உட்பட சர்வதேசநாடுகளின் கவனிப்புக்குரிய கிழக்குப் பிரதேசத்திலேயே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. புலிகளின் நிலைகள் என்ற பெயரில் பிள்ளைகள், முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ், முஸ்லீம் மக்களை கிழக்கிலிருந்து விரட்டுவது அல்லது தனிமைப்படுத்துவது, தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவது என்ற இலங்கை அரசின் நீண்டகாலத் திட்டமே இங்கு வெளிப்பட்டுள்ளது. யுத்தகாலங்களில் சத்துருக்கொண்டான் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலகள் என்று திட்டமிடப்பட்ட பாரிய இன அழித்தொழிப்பு நடவடிக்கைகள் கிழக்கிலேயே இலங்கை அரசால் நடாத்தப்பட்டன. இந்த அரசியல் இன்னும் மாற்றமடையவில்லை என்பதையே இலங்கையரசின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் காட்டி வருகின்றன. சர்வதேசநாடுகளின் இராசதந்திரிகளின் வருகை, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அரசபடைகளின் பிரசன்னம் போன்றவையும் கிழக்குப் பிரதேசத்தின் முக்கியத்தைக் காட்டி நிற்கின்றன.

முஸ்லீம் மக்கள் தொடர்பான நிலைப்பாடு, கருணாவின் பிளவைக் கையாண்டவிதம், வடக்கை மையப்படுத்திய நிர்வாகம் போன்ற புலிகளின் அரசியலால் கிழக்குமாகாணத்தின் நிலமை இன்னும் கேள்விக்குறியாகியுள்ளது. இதில் கவனம் குவிப்பதற்குப் பதிலாக, அன்றும் இன்றும் தமிழ்மக்களைக் குண்டுவீசியழிக்கும் விமானப்படையின் விமானங்கள் தங்களை ஏற்றிச் செல்லவில்லை என்பதையே பேச்சுவார்த்தைக்குப் போகாமைக்கான காரணமாகப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளின் தலையீடு, பேச்சுவார்த்தை, புலிகளின் சொந்த மக்கள் மீதான வன்முறைகள் போன்றவற்றால் சர்வதேசரீதியில் பலவீனமான நிலையில் தமிழர் பிரச்சினை இருக்கின்ற நிலமையில், இலங்கை அரசு தனது இனவாத அரசியலை நிழலாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

பிரேமதாசா காலத்தில் உயிரோடு எரித்தல், கடத்தல், காணாமற்போக வைத்தல் என்று ஜே.வி.பி,யை அழித்த இராணுவ அதிகாரிகளுக்கு மறுபடியும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டு தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக சத்தமில்லாமல் கடத்தப்பட்டு வந்த தமிழர்கள் இப்போது பகிரங்கமாகவே கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள்.

பேச்சுவார்த்தை முட்டுச்சந்திக்கு வந்துள்ளது.

இந்நிலையில் என்ன செய்வதாக உத்தேசம் என்று நாம் யாரைக் கேட்கலாம்?

ஈழத்திலும், வெளிநாட்டுத் தமிழர் சமூகத்திலும் அரசியல் நீக்கம் செய்து, கலை, கலாச்சாரம், பள்ளிக்கூடம், பேச்சுவார்த்தை, பொங்கியெழுதல்…. என்று எல்லாவற்றிலும் ஏகபிரதிநிதிகளாக தங்களைப் பிரகடனப்படுத்தும் புலிகளைத்தானே கேட்கலாம்!

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting