யாருக்கு மதங்கள் தேவை ?

சென்ற வருடம் செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி Jyllands-Posten (1) என்ற டென்மார்க் பத்திரிகை முகம்மது நபியைக் கிண்டலடித்து கேலிச் சித்திரங்கள் வெளியிட்டது. அதனைக் கண்டித்து இந்த வருடம் பெப்ரவரி மாதம் தீவிரமடைந்த முஸ்லீம்களின் எதிர்ப்பு தூதரகங்கள் எரிப்பு, பகிஸ்கரிப்பு என்பவற்றுடன் எதிர்ப்புகளில் பங்குபற்றியோரின் உயிரழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

1.
Jyllands-Posten பத்திரிகை டென்மார்க்கின் வலதுசாரிகளின் ஊதுகுழலாக இருந்து வருகிறது. டென்மார்க்கில் தற்போது ஆட்சியிலிருக்கும் வலதுசாரிக்கூட்டணி ஏற்கெனவே டென்மார்க்கிலுள்ள வெளிநாட்டவர்களுக்கெதிராக செயற்பட்டுவரும் வேளையில் அதற்கு ஆதரவாக பொதுமக்கள் கருத்தை உருவாக்கும் பணியில் Jyllands-Posten பத்திரிகை ஈடுபட்டுள்ளது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கையில், தற்போது தீவிரமடைந்துள்ள முஸ்லீம்களின் எதிர்ப்பை இந்தப் பத்திரிகை முற்கூட்டியே எதிர்பார்க்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும் கூட, டென்மார்க்கிலுள்ள முஸ்லீம்களை ஆத்திரமூட்டவே இக் கேலிச் சித்திரங்களைத் திட்டமிட்டு வெளியிட்டிருக்கிறது. டென்மார்க்கில் வெளிநாட்டவருடன் கலாச்சாரச்சண்டை வர இருப்பதாகவும், முஸ்லீம் சமூகம் டென்மார்க் மக்களுடன் ஒன்றாக வாழ முடியாது என்றும் இந்தப் பத்திரிகை ஏற்கெனவே பயமுறுத்தி வந்துள்ளது. கேலிச்சித்திரங்களுக்காக மன்னிப்புக் கேட்கப் போவதில்லை, ஏனென்றால் அது பத்திரிகைச் சுதந்திரம் என்று டென்மார்க் அரசு தனது கருத்துதைத் தெரிவித்திருப்பதும் அதனது வலதுசாரிக் கொள்கைகளுக்கமையவே.

2.
முஸ்லீம்களையும், இஸ்லாமையும் அவமதித்ததற்காக டென்மார்க் அரசு மன்னிப்புக் கேட்பதுடன், Jyllands-Posten பத்திரிகையையும் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முஸ்லீம்நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்ததும் 30இற்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாட்டுப்பத்திரிகைகள் சர்ச்சைக்குள்ளான கேலிச்சித்திரங்களை மறுபிரசுரம் செய்ததுடன், அந்தந்த நாட்டு அரசுகளும் இதெல்லாம் பத்திரிகைச் சுதந்திரம் என்றும், முஸ்லீம்களின் வன்முறைகளைக் கண்டிப்பதாகவும் அறிக்கைகள் வெளியிட்டனர். இது எரிகின்ற நெருப்பில் இன்னும் எண்ணெய் ஊற்றும் நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது.

தமது உள்நாட்டு வலதுசாரி அரசியலின் நீட்சியாக டென்மார்க் அரசும், குறிப்பிட்ட பத்திரிகையும் முஸ்லீம் எதிர்ப்பைக் காட்டியதைப் போலல்லாமல், டென்மார்க்கிற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் களத்தில் குதித்திருப்பதற்கு நீண்ட அரசியல் பின்னணியிலுள்ளது.

சோவியத் யூனியன் மற்றும் அதன் நேச நாடுகளுடனான பனிப்போர் முடிந்ததும் வல்லாதிக்க நாடுகளின் பொது எதிரியாக அரபுநாடுகள் மீது குறிவைக்கப்பட்டது. இங்கே குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில், பனிப்போர் காலத்தில் இடதுசாரிகள், கொம்யூனிஸ்ற்றுகள் மீதான தாக்குதல்/கொலை/சீர்குலைப்பு நடவடிக்கைகளுக்கு இதே அமெரிக்க கூட்டு நாடுகளால் இப்போது பயங்கரவாதிகள், மத அடிப்படைவாதிகள், சர்வாதிகாரிகள் என்று வர்ணிக்கப்படும் சதாம், பின்லாடன் போன்றவர்களும் அல்ஹைடா, ஹமாஸ் போன்ற குழுக்களும் பயன்படுத்தப்பட்டன. அப்கானிஸ்தானிலிருந்து சோவியத்தை விரட்ட பின்லாடனும், ஈராக்கில் கொம்யூனிஸ்ற்றுகளைக் கொல்லவும், ஈரானைப் பலவீனமாக்கவும் சதாமும், பாத் கட்சியும், பலஸ்தீனவிடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாகவும், ஏனைய நாட்டுப் போராளிக்குழுக்களுடன் தொடர்பும் வைத்திருந்தபோது அதன் மீதான தாக்குதலுக்கு ஹமாஸும் அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்டார்கள்.

அன்றைய பனிப்போர்க்கால எதிரிகள் இன்று நேச சக்திகள் ஆகிப்போனதும் அன்றைய நேச சக்திகள் இன்று எதிரிகளாகிவிட்டனர். ஆனால் யுத்தம் தொடுப்பவர்கள் மட்டும் மாறாமலேயிருக்கிறார்கள்.

வல்லாதிக்க நாடுகளுக்கு பொது எதிரி எப்போதும் தேவையாகவேயிருக்கிறது. வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், உள்நாட்டுப் பிரச்சினைகளைத் திசை திருப்பவும் பொது எதிரி மீதான யுத்தம்/யுத்த முனைப்புகள்தான் உதவின. இப்போதும் உதவிக் கொண்டிருக்கின்றன. பொது எதிரியின் பயங்கரவாதத்தைக் காட்டிக் காட்டியே தங்கள் அதிகாரங்களை ஆளும் வர்க்கம் தக்க வைத்துக் கொள்கிறது. ஆயுத வியாபாரத்தைச் சட்டபூர்வமாக்குகிறது. இவை எல்லாவற்றையும்விடத் தமது அதிகாரங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தத்தமது நாட்டு மக்களையே முழுக் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

பனிப்போர்க்கால எதிரிகளை இப்போது தம்முடன் இணைத்துக்கொண்டு அவர்களின் மலிவுக் கூலித் தொழிலாளர்களை சுரண்டிக் கொண்டிருக்கும் வல்லாதிக்க நாடுகளுக்கு அதிகரித்து வரும் எரிபொருள்தேவையால் அம் மூலவளங்களையும் தமக்குக் கீழ் கொண்டுவருவது அவசியமாகிறது. தவிர, இஸ்ரேலுக்கான அச்சுறுத்தலை இல்லாதொழிக்கவும், அரபுநாடுகளைப் பலவீனப்படுத்தவும் போர்தொடுத்து வருகின்றன.அமெரிக்காவின் “ஒரு உலகத் திட்டத்தின்” கீழ் இவையெல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன.

பத்திரிகைச் சுதந்திரம் என்று இந்த நாடுகள் இப்போது தூக்கிப்பிடிக்கும் விடயத்திற்கு எவ்வளவுதூரம் தாங்கள் உண்மையாக இருக்கிறோம் என்று இவர்கள் கேட்டுப்பார்ப்பதில்லைப் போலும். Aljazeera (2) தொலைக்காட்சி நிறுவனத்தை குண்டு போட்டுத் தகர்ப்பது குறித்து புஷ்ஷும், பிளேயரும் பேசிக் கொண்டதும், Indymedia (3)என்ற சுதந்திர இணைய ஊடகத்தை முடக்குவதற்கு அவர்களின் வழங்கிகளை (Server) அமெரிக்காவிலும், ஐரோப்பியநாடுகளிலும் பொலிஸார் கைப்பற்றியதும் இவர்களின் கருத்துச் சுதந்திரமே! ஈராக் மீதான யுத்தத்திற்கு எதிராகவும், புஷ்ஷின் போர்வெறிக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்த பிரபல பாடகர்கள், ஹொலிவூட் நடிகர்களை கறுப்புப்புப் பட்டியலில் சேர்த்து அவர்களை இருட்டடித்ததும் இவ்ர்கள் கருத்துச் சுதந்திரம்தான். இந்த மாதம் புஷ் தேசிய உரை நிகழ்த்த வரும்போது, ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவத்தினனின் தாய் ஒருவர், போருக்கு எதிரான சுலோகங்களுடனான ரீசேட் போடிருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அந்தந்த நாட்டின் பாதுகாப்பு என்ற பதாகையின் கீழ் யுத்தம், அரசு பற்றிய தகவல்களை தணிக்கை செய்வதும் கருத்துச் சுதந்திரம்தான். சதாம்குசேன் மீதான வழக்கு விசாரணைகள் அமெரிக்க இராணுவத் தலைமையலுவலகத்தால் தணிக்கைசெய்யப்பட்டு 30 நிமிடத் தாமதத்தின் பின்னும் நேரடி ஒளிபரப்பு என்ற பெயரில் தருவதும் இவர்களின் தகவல் சுதந்திரம் தான். இவ்வளவும் ஏன், தமக்குக் கிடைத்த கிறிஸ்தவ மதம் பற்றிய கேலிச் சித்திரங்களை வெளியிட மறுத்ததுடன், இவற்றை வெளியிடுவதன் மூலம் கிறிஸ்தவர்களின் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை என்று காரணமும் தெரிவித்தது அதே Jyllands-Posten பத்திரிகைதான்.

கேலிச்சித்திரங்களுக்கு இவ்வளவு எதிர்ப்பா என்கிறார்கள். 1988இல் வெளியானThe Last Temptation of Christ (4) என்ற படத்தை திரையிடக் கூடாதென கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அமெரிக்காவில் திரையரங்குகள் படத்தை திரையிட மறுத்தன. இப் படத்தை திரையிட்ட திரையரங்கொன்று பிரான்ஸில் தீக்கிரையானது.

குரானில் மத நம்பிக்கையற்றவர்களுக்கெதிராக வன்முறையைத் தூண்டும்படி எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள். இதையொத்த கருத்துகள் – உடல் ஊனமுற்றவர்களுக்கெதிராகவும், மத நம்பிக்கையற்றவர்களுக்கும் எதிராகவும் – பைபிளில் இருப்பதை யாரும் படிக்க மாட்டார்கள் என்று அசட்டு நம்பிக்கை இவர்களுக்கு (5).

(இறுதிப் பகுதியைப் பார்க்க)

மேலதிக விபரங்களுக்கு
(1) http://en.wikipedia.org/wiki/Jyllands-Posten_Muhammad_cartoons_controversy
(2) http://www.alternet.org/waroniraq/28690/
(3) http://www.truthout.org/docs_04/100904W.shtml
(4) http://en.wikipedia.org/wiki/The_Last_Temptation_of_Christ
(5) http://en.wikipedia.org/wiki/Fundamentalist

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting