புலி, சிங்கம், கழுகு

… புலிகளை நாம் கண்டிப்பதுடன், அவர்களை பயங்கரவாத இயக்கமாகவே அடையாளப்படுத்தியுள்ளோம். இவர்களுக்கு நிதியுதவி செய்யும் எந்த ஒரு தனிப்பட்டவர்களையும் அல்லது தனிப்பட்ட குழுக்களையும் நாம் தடை செய்வோம்…

… (இலங்கை) அரசை உறுதியானதாக்கவும், எதிர்காலத்தில் இந்நாட்டு மக்கள் மீதான தாக்குதல்களை அரச இராணுவம் முறியடிப்பதற்காகவும் (இலங்கை) அரசுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருவதுடன், (இலங்கை)இராணுவத்திற்கு எமது இராணுவம் மூலம் பயிற்சியளித்து வருவதன் மூலம் (இலங்கை) அரசுக்கான எமது ஆதரவைக் காட்டுகின்றோம்…..

- அமெரிக்க இணை வெளிவிவகார அமைச்சர்

… உலகம் ஏதோ புலிகளுக்கு எதிராகத் திரும்புகிறது, எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு (எதிராக) உலகம் மாறப் போகிறது என்ற அச்சத்தை உருவாக்குவதற்கான ஒரு கருத்தாக இதைப் பார்க்கக் கூடாது…..

… நாங்கள் எந்த பயங்கரவாதச் செயலை செய்யவுமில்லை. எவருக்கும் எதிராக நாங்கள் போரைத் தொடங்கவும் இல்லை. நாங்கள் எங்கள் சாவிலிருந்து எங்களைக் காப்பதற்காக வாழ்வை அதற்குள் அமைப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம் அல்லாமல் வேறு எதுவும் கிடையாது என்பதை அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் உணர வேண்டும் என்பதை தமிழ்ம்க்கள் சார்பாக கோருகிறோம்….

- விடுதலைப் புலிகளின் பேச்சாளர் பாலகுமாரன்

(மேற்படி உரைகளின் முழுவடிவத்தையும் படிப்பதற்கான சுட்டிகள் கீழே தரப்பட்டுள்ளன. மேலே அடைப்புக்குறிக்குள் எழுதப்பட்டிருப்பவை விளக்கதிற்காக மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன)

இலங்கை, இலங்கை அரசு, புலிகள், போர் பற்றிய அமெரிக்கவின் கருத்து தெளிவானது. இது இலங்கைகென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் கொள்கையல்ல. அமெரிக்க அரசு தனது நலன்களைப் பொறுத்தே எதிரி/நண்பர் அணுகுமுறையைக் கையாள்கிறது. சதாம்ஹுசேனும், பின்லாடனும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு/நலன்களுக்கு நண்பர்களாக இருந்ததும் பின்னர் எதிரியாகப் போனதும் இந்த அடிப்படையில்தான். தனது சுதந்திர வர்த்தக வலயத்திற்கு எதிராக இருக்கும் தென்னமெரிக்க நாடுகளை அமெரிக்கா எதிரியாக அணுகுவதும் இந்த அடிப்படையில்தான். தனது நலன்களுக்கு எதிரானவர்களை அழிக்க நேரடி யுத்தத்தை நடாத்தவோ, உளவுப்படைகள் மூலம் உள்நாட்டுகலவரங்களை ஏற்படுத்தவோ அமெரிக்க அரசு தயங்கியதில்லை. அன்றைய வியட்நாமும் இன்றைய ஈராக்கும் சிலவேளைகளில் நாளைய ஈரானும் கூட இதற்கு சாட்சியங்களாகின்றன.

தனக்கு முரணான நாடுகளை பயங்கரவாத நாடுகளாகவும் அமைப்புகள்/குழுக்களை பயங்கரவாதிகளாகவும் பகிரங்கமாகவே அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

மக்கள் நலன் (இதில் அமெரிக்க மக்களின் நலன்களும் சேர்ந்துதான்) அமெரிக்க ஆளும் அதிகாரக் கும்பலின் நலன்களுக்கு என்றும் முரணனவையே. இந்த உண்மையை உலக மக்களுடன் சேர்ந்து அமெரிக்க மக்களும் அநுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்கா அதனுடன் சேர்ந்த கூட்டாளி நாடுகளும் தங்கள் நலன்களுக்கேற்ப மற்றைய நாடுகள்/அரசுகள்/போராட்ட அமைப்புகள்/குழுக்கள் மீது தங்கள் அழுத்தம்/அதிகாரத்தைப் பிரயோகித்து வருகிறார்கள். இது சந்தர்ப்பத்தைப் பொறுத்து நயவஞ்சகமாக முதுகில் தட்டிக் கொடுப்பதாகவும், பயமுறுத்துவதாகவும் அமைகிறது.

இந்த உண்மையை புலிகளின் அரசியல் பேச்சாளர் சொல்லவில்லை. மாறாக விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக உலகம் (இங்கு உலகம் என்பது உலகத் தலைமைத்துவத்தை தங்களுக்கு கீழ் கொண்டுவர முனையும் அமரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளுமே) இல்லை, ஒருதரும் பயப்பட வேண்டாம் என்று மக்களை நித்திரைக்கு அனுப்புகிறார். தங்கள் போராட்டத்தை உணரும்படி அமெரிக்காவிடமும், வல்லாதிக்க நாடுகளிடமும் கோருகிறார்.

மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படும் விடுதலைப் போராட்டம் அமெரிக்க அதன் கூட்டாளிநாடுகளின் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எதிரானதுதான். அவர்கள் ஒருபோதும் உண்மையான விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கப் போவதில்லை. மாறக எல்லாவழிகளிலும் அழித்தே வருகிறார்கள்.

போராட்டத்தை உணருங்கள் என்ற கோரிக்கையை வைக்க வேண்டியது இவர்களிடமல்ல, இந்த நாடுகளிலுள்ள மக்களிடமே. இந்த மக்கள்தான் அன்றைய வியட்நாம் யுத்தம் என்றாலும் இன்றைய ஈராக் யுத்தம் என்றாலும் தங்கள் அரசுகளை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இவர்களின் பலம் வியட்நாம் யுத்தத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் போகாமல் வல்லாதிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுவது புலிகளின் அறியாமையல்ல. மக்கள் பற்றிய அவர்களது புரிதல், அவர்களது “அரசியல்” அடிப்படையிலிருந்து வருகிறது.

நாங்கள் எங்கள் சாவிலிருந்து எங்களைக் காப்பதற்காக வாழ்வை அதற்குள் அமைப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம் அல்லாமல் வேறு எதுவும் கிடையாது என்று புலிகள் சொல்லும்போதும் மக்கள் சொல்லும்போதும் அர்த்தம் வேறாகிறது.

இலங்கை அரசின் நிலையோ இன்னும் கேவலமானது. நாடு பொருளாதாரத்தில் வங்குரோத்தாகப் போய்க்கொண்டிருக்கிறது. விலைவாசி ஏறிப்போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அரசு வாயைத் திறந்தால் வருவது ஒற்றையாட்சி, புலிகள், பயந்கரவாதம், இராணுவம், பேச்சுவார்த்தை, யுத்தம் இவை மட்டும்தான். பாராளுமன்றமே இவற்றைக் கதைப்பதற்கு மட்டும்தான் என்று கூடிக் கலைகிறார்கள்.

தாங்கள் தூக்கிப்பிடிக்கும் (பெருந்)தேசியவாததிற்கு உண்மையாக இருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. முழுநாட்டையுமே யுத்தத்திற்குள் தள்ளிவிட்டு இப்போது அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் செங்கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். நாட்டின் அரசியல் அதிகாரத்தை இனங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு தயாரில்லை. ஆனால் முழுநாட்டையும் ஏகாதிபத்தியங்களுக்கு விற்றுவிடுவதற்கு நான் நீ என்று போட்டி போடுகிறார்கள்.

நாட்டின் வருமானம் இன்று பெருமளவில் உல்லாசப் பிரயாணத்துறையே சார்ந்துள்ளது. இதன் சாதககங்களை ஆளுகின்றவர்கள் பெற்றுக்கொள்ள பாதகங்கள் சாதாரண மக்களைப் போய்ச் சேருகிறது. பாதாள உலகம் அகலக் கால் வைத்துக் கொண்டிருக்கிறது. யுத்தத்தைக்காட்டி ஆயுத வியாபாரக்கும்பல்கள் வளர்ந்து வருகின்றன.

உலகத்தில் மாறுதல்கள் இப்போது வேகமாகவே இடம்பெறுகின்றன. சரிந்துவரும் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வல்லாதிக்க நாடுகளின் எல்லைகள் மறைந்து வருகின்றன. இப்போது முக்கிய நுகர்வோர்களாக மூன்றாம் உலகநாட்டு மக்களே குறிவைக்கப்படுகின்றனர். உலகமயப்படுத்தல் விரைந்து வியாபித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த மாற்றங்கள் எதுவுமே இல்லாதது போல கற்பிதம் செய்துகொண்டு எங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று காட்டுவது எவ்வளவு காலத்திற்கு சாத்தியமாகும்?

சிங்கம், புலி சண்டையில் தனது இரைக்காக கழுகு நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டிருக்கிறது.

6 கருத்து x கருத்து

MayavarathaanFebruary 11th, 2006 at 11:04

About this blog in today’s dinamalar…

http://www.dinamalar.com/2006feb11/flash.asp

M RAJANFebruary 12th, 2006 at 00:24

This article shows “”ARISING OF TRUTH””

கில்லிApril 8th, 2006 at 10:57

[...] சமீபத்திய அமெரிக்க அறிக்கைகளையும், இலங்கை நிலையையும் விடுதலைப்� புலிகள்� குறித்த எண்ணங்களையும் அலசும்� பதிவு.� மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படும் விடுதலைப் போராட்டம் அமெரிக்க அதன் கூட்டாளிநாடுகளின் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எதிரானதுதான். மக்களிடம் போகாமல் வல்லாதிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுவது புலிகளின் அறியாமையல்ல. இந்த மக்கள்தான் அன்றைய வியட்நாம் யுத்தம் என்றாலும் இன்றைய ஈராக் யுத்தம் என்றாலும் தங்கள் அரசுகளை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். மக்கள் பற்றிய அவர்களது புரிதல், அவர்களது “அரசியல்” அடிப்படையிலிருந்து வருகிறது. போராட்டத்தை உணருங்கள் என்ற கோரிக்கையை வைக்க வேண்டியது இவர்களிடமல்ல, இந்த நாடுகளிலுள்ள மக்களிடமே. [...]

ரோஸாவசந்த்November 17th, 2006 at 20:28

பொறுக்கி, சிறப்பான கருத்து. மேலே எழுத நினைத்தேன். கோர்வையாக வராததால் நிறுத்திக் கொள்கிறேன்,

ஈழநாதன்November 17th, 2006 at 21:16

பொறுக்கி நீங்கள் சொல்வது சரிதான்.உள்ளூரில் பெரியண்ணன் அமெரிக்காவையும்(உலக ஏகாதிபத்தியம்) சின்னண்ணன் இந்தியாவையும்(பிராந்திய வல்லாதிக்கம்) திட்டுவது பத்திரிகை அறிக்கைகளிலும் வெளிநாட்டுத் தூதுவர் சந்திப்புகளிலும் இந்தியாவும் அமெரிக்காவும் தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது என இரட்டைத் தன்மை கொண்டதாக இருக்கிறது புலிகளின் செயற்பாடு.
எனக்கு ஒரு சந்தேகம்
இன்றைய காலத்தில் உலகநாடுகளின் அங்கீகாரம் தேவையில்லை என உதைத்துத் தள்ள முடியாது என்பதை ஒத்துக் கொள்வீர்கள்.உலகம் என்பது அமெரிக்கா இல்லைத் தான் என்றாலும் அமெரிக்கா சொல்வதற்குத் தானே அனைத்து நாடுகளும் ஆமாம் போடுகின்றன.இதில் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தினால் மட்டும் உலகநாடுகள் ஒத்துக்கொண்டுவிடுமா?

பொறுக்கிNovember 17th, 2006 at 22:11

ஈழநாதன், அமெரிக்கா சொல்வதற்கு “அனைத்து நாடுகளும்” ஆமாம் போடுவதாக கற்பிதம் செய்யப்படுகிறது.

பொய்யினால் கட்டமைக்கப்பட்ட ஈராக் யுத்தத்தின் அடிப்படையிலேயே இன்று அமெரிக்க மக்கள் புஷ் கட்சியை ஓரங்கட்டியுள்ளனர். இது அமெரிக்க அரசு சொன்ன அனைத்தையும் அமெரிக்க மக்கள் நம்பவில்லையென்பதையும், யுத்தத்திற்கான அங்கீகாரம் வழங்கவில்லையென்பதையும்தானே காட்டுகிறது. தவிர, யுத்தத்தில் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்த நாடுகளே ஒவ்வொன்றாக ஈராக்கைவிட்டு ஓடித் தப்புகின்றன.

அண்மையில் நேபாளத்தில் போராளிகளும், மக்களும் இணைந்த புரட்சியில் அமெரிக்காவும், கூட்டுநாடுகளும், ஐ.நா.வும் தோல்வியைச் சந்திக்கவில்லையா?

அமெரிக்காவின் உலகப் பொருளாதாரத் திட்டத்தை எதிர்க்கும் தலைவர்கள்தானே அடுத்தடுத்து தென்னமெரிக்காவில் மக்களால் நாடுமன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்படுகிறார்கள்.

நிக்கரகுவாவில் சண்டினிஸ்ற்றுகளை எதிர்க்க அமெரிக்காவால் அண்மைநாடான கொண்டுராஸில் உருவாக்கப்பட்ட கொன்ராஸ் அணிக்கு சர்வதேச அங்கீகாரம் இருந்தும் புரட்சி அணியை வெல்ல முடியவில்லை. இத்தனைக்கும் அப்பால் இப்போது திரும்பவும் சண்டினிஸ்ற் தலைவர் டானியல் ஒற்றெகாவையே மக்கள் அரசுக்குத் தெரிவு செய்துள்ளார்கள்.

அமெரிக்கா இதுவரை அங்கீகரித்த பின்லாடனின் அல்கைடா, ஈராக்கில் சதாம் ஆகியோருக்கு இப்போது என்ன நடக்கிறது?

விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அங்கீகரிப்பு என்பதில் ஆரம்பிக்காமல், மக்கள் நலன்களிலிருந்து ஆரம்பிப்பதே அடிப்படை. மக்கள் பலம்தான் உலகநாடுகளின் ஆதரவைத் திரட்டக்கூடிய சக்தி. இது உலக வரலாற்றில் திரும்ப திரும்ப நிரூபிக்கப்பட்டு வருகிறது.

ஈழநாதன், இதனை உங்களுக்கான பதிலாக இல்லாமல் ஒரு கருத்தாடலாக எடுத்துக்கொள்ளுங்கள்.

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting