அவர்களைப் பற்றி…

“அடிப்படையில் எல்லா மனிதர்களும் மனநோயாளர்கள்தான். அப்படியில்லாதது இன்னொருவிதமான மனநோய்” – பாஸ்கல்

ஊரிலே, மனநோயாளி ஒருவர் இருப்பாரானால் அந்த ஊர் சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தான். கல்லெடுத்து எறிவதும், பரிகசிப்பதும், அவர்களைத் துன்புறுத்தி அதில் வேடிக்கை காண்பதும் அவர்களது பொழுதுபோக்காகிவிடும். இது பற்றி அவர்களது பெற்றோர்/ஊர்பெரியோர் என்று யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதது சிறுவர்களுக்கு Open license ஆகிவிடும். இது தவிர தம்மை விட வயசு மூத்தவர்கள் இந்த மனநோயாளிகளை நடத்தும் முறையைப் பார்க்கும் சிறுவர்களுக்கு அதுவே ஊக்கமாகிவிடுகிறது.

…………………………….
83இன் பின் ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த (30இற்கும் மேற்பட்டவை) பெரும்பாலானா இயக்கங்கள் மனநோயாளிகளையும் தமது இலக்காகக் கொண்டிருந்தனர். மனநோயாளிகளில் சுட்டுப் பழகினர். அவர்களைக் கொன்று, விளக்குக் கம்பத்தில் கட்டித் தூக்கிவிட்டு, சிங்கள அரசின் உளவாளிகள் என்று எழுதி வைத்தார்கள். கொல்லப்பட்டவர்கள் மனநோயாளிகள் என்பதாலோ என்னவோ இவற்றிற்கெதிராக மனிதாபிமானக்குரல்கள் எதுவும் தமிழ்பிரதேசங்களில் வீறுகொண்டு எழவில்லை. கிழக்கு மாகானத்தில் இப்படியாக புளொட்டினரால் கொல்லப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய சிறுகதையொன்று 90களில் ஐரோப்பிய சிறுசஞ்சிகையொன்றில் வந்திருந்தது.

…………………………….
மனநோயாளர்களுக்கான சிகிச்சை முறைகளும் நகைச்சுவையாக்கப்பட்டிருந்தன. விலங்குகளைப் போல சங்கிலியால் கட்டி வைப்பதே பொதுவான சிகிச்சையாக இருந்தது. அங்கொட என்ற இலங்கையின் மேற்குப்பகுதியிலிருந்த பிரபலமான மனநோய் மருத்துவமனை தமிழர்களால் மனநோயாளர்களைக் கேலி செய்வதற்கு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது. யாழ்.பெரியாஸ்பதிரியில் 4வது இலக்க சிகிச்சைப் பிரிவில் மனநோயாளர்கள் தங்க வைக்கப்பட்டனர். இதனால் 4ஆம் வாட் என்பதும் மனநோயாளர்களைக் குறித்துக் கேலிசெய்யும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது. தமிழத்தில் இது கீழ்ப்பாக்கம் என்றிருந்தது.

ஒரு பக்கத்தில் மனநோய் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மனநோயாளிகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர். மற்றப் பக்கத்தில் இவர்களுக்கான பொறுப்பை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில் தெருவில் அலையவிடப்பட்டார்கள். இவர்கள் சாப்பிட உணவின்றி பட்டினியாலோ, தெருவில் வாகனங்களால் மோதப்பட்டோ செத்துப்போனார்கள்/கொல்லப்பட்டார்கள்.

………………………………
ஊடகங்களில் மனநோயாளிகள் கேலி செய்யப்பட்டனர். யாழிலிருந்து வெளியான சிரித்திரனிலிருந்து, தமிழக விகடன்/குமுதம் வரை இதில் விதிவிலக்கில்லை. நாடகங்களிலும் நகைச்சுவை என்ற பெயரில் மனநோயாளர் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. இந்தப் பாத்திரங்களைக் கண்டவுடனேயே பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய விதத்தில் இந்த மனநோயாளிகள் பாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கோடம்பாக்கத்து சினிமாக்களும் நாடகங்களின் அடிப்படையில் மனநோயாளிகளை நகைச்சுவைப் பாத்திரங்களாக அமைத்துக் கொண்டன. யதார்த்த வாழ்வில் கண்ணில் அகப்படும் மனநோயாளிகளை சினிமா காட்டிய மனநோயாளிகளாகப் பார்ப்பதும், படங்களில்/நாடகங்களில் வந்ததுபோலவே அவர்களை கேலி/துன்புறுத்தல் செய்து அதில் இன்பம் காண்பதும் தொடர்கிறது.

………………………………
நகைச்சுவைக்காக கோடம்பாக்கத்து சினிமாவில் கையாளப்பட்ட மனநோயாளிகள் திடீரென வேறு ஒரு பரிமாணத்திற்கு மாற்றப்பட்டார்கள். குழந்தையாக/சிறுபிள்ளையாக இருக்கும்போது உரிய அன்பு/பாசம்/கவனிப்பு கிடைக்காமல் போபவர்கள் வளர்ந்ததும் ஈவிரக்கமற்ற கொலையாளிகளாக/கொடுமயானவர்களாக மனயோயாளிகளாகி விடுகின்றனர் என்பதே கோடம்பாக்கத்தின் கண்டுபிடிப்பு. பாலுமகேந்திராவின் மூடுபனி, பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் ஒரு வகை. செல்வராகவனின் காதல்கொண்டேன், சுந்தரின் சின்னா, பாரதிராஜாவின் கண்களால் கைது செய் இன்னொருவகை என்று பட்டியல் போய்க் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே மனநோயாளிகளைப் பற்றி பொதுப் புத்தி மட்டத்தில் ஒரு பார்வை இருக்கிறது. இது ஆரோக்கியமற்ற, மனிதாபிமானமற்ற பார்வை. நோயாளிகளை நகைச்சுவையாக்கும்/கேவலப்படுத்தும் பார்வை. அவர்களைத் துன்புறுத்தி, அதில் சிரித்துக் கொள்ளும் வக்கிரமான பார்வை.

தற்போது அடுத்தடுத்து வரும் கோடம்பாக்கத்து சினிமாக்களோ மனநோயாளிகளைப் பார்த்து கொலைப் பயத்தில் மிரள வைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன.

……………………………………
மனநோய் என்பது ஒரு நோயாக எமது சமூகத்தால் பார்க்கப்படாததால், மனநோயாளிகளும் நோயாளிகளாகப் பார்க்கப்படுவதில்லை. இதனால் இவர்களுக்கான சிகிச்சைகளும் கவனிக்கப்படுவதில்லை. குறிப்பாக மனநோயாளிகளுக்கு கிடைக்க வேண்டிய அன்பு/அருகாமை/கவனிப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதற்கு நேரெதிரான விதத்திலேயே எமக்கும் அவர்களுக்குமான உறவு இருக்கின்றது.

……………………………………………………………………….
மனநோயாளிகள் குறித்து சில விடயங்களை நான் புரிந்து கொள்ள உதவியவை:
1. “மனநோயாளிகள்,சிகிச்சை முறைகள்: சில குறிப்புகள்” – கோபி கிருஷ்ணன் (126ஆம் பக்கம், “மழை” காலாண்டிதழ், ஆசிரியர் யூமா.வாசுகி)
2. “கொஞ்சம் அவர்களைப் பற்றி….” – சபி, லதா ராமகிருஷ்ணன், கோபிகிருஷ்ணன் (சவுத் ஏசியன் புக்ஸ்)

Technorati Tags:

இதைப் போன்ற சில பதிவுகள்

2 கருத்து x கருத்து

[http://porukki.blogsome.com/2005/09/25/21/]

1.

நல்ல கருத்து. பலர் மன அழுத்ததிற்கு உள்ளாகி கற்பனை பல செய்து உழலுவதை பார்க்கிறேன். நீங்கள் சொன்னது போல இதற்கு ஒரு வடிகால் ஆலோசனை, மருத்துவரின் கவனிப்பு அவசியம் வேண்டும். சில வாரங்களாக இதை பற்றி நான் எழுதியதன் சுட்டி:
http://www.tamiloviam.com/unicode/09010504.asp
இதை பற்றிய சிந்தனையை தூண்டியமைக்கு நன்றி. இது போன்றவை ஏர்வாடியில் துன்புற்ற பலரை நினைவூட்டுகிறது

எழுதியவர்: padma arvind — 25 September 2005 @ 00:54

2.

நட்புடன்
மனநோய் பற்றி உங்கள் பதிவு பாரட்டத்தக்கதே. ஆனாலும் அதில் இன்னுமொரு பக்கம் உண்டு. அதாவது மனநோய் ஏன் உருவாகின்றது என்ற கேள்வியும், அதற்கான தீர்வையும் உள்ளடக்கிய பார்வை அவசியமானது.

மனநோய் என்பது வெறும் மருத்துவம் சார்ந்தல்ல. இன்றைய சமூகம் எப்படி இதை புரிந்து கொள்ளவி;லையோ, அப்படித் தான் நவீன மருத்துவமும் இதை ஒரு நோய்யாக மட்டும் பார்க்கின்றது. மாறக சமூக முரண்பாடுகளில் எற்படும் நெருக்கடிகள், தனிமனிதனுக்கு உளச்சிக்கலை எற்படுத்தும் போது, இதுவே மனச் சிதைவாக மாறுகின்றது.

இது அன்பு, பரிவும் கவனிப்புக்கு உட்படுத்துவது என்பது, இந்தப் பிரச்சனைக்குரிய சரியான தீர்வுமல்ல. இது அவசியமானது என்பதை மறுப்பதற்கில்லை.

சமூகம் சமூகமாக இல்லாது திரிபுபட்டுள்ள ஒரு நிலையில், அதன் உள்ளடக்கமாக வெளிப்படுவது தான் மனநோய். சமூதாயத்தின் கூட்டுவாழ்வுமுறையில் எற்பட்டுள்ள தனிமனித வன்முறை சமூக அமைப்புத்தான் மனநோய்க்கு காரணம்;. சமூகம் முரணற்ற வகையில் சக மனிதனை புரிந்து கொண்டு, வாழும் முறைமையே இதற்கான பரிகாரத்தில் முதன்மையானது.
மனநோய்க்கு உள்ளாகும் படிநிலையின் முதற்படியில் தான் தற்கொலைகள் கூட நடக்கின்றன. இது விரிவான சமூகம் சார்ந்த விடையம் கூட.

பி.இரயாகரன்
24.09.2005

எழுதியவர்: rayakaran — 25 September 2005 @ 03:25

3.

நண்பரே அவசியமானதொரு விதயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.நன்றி மனச்சிதைவுக்குள்ளானவர்களைப் பராமரிக்கும் நிலையம் பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையிலும் இருந்தது.ஆனால் யாழ்மாவட்ட்டத்தில் மனச்சிதைவுக்கான சகல வைத்திய வசதிகளுடனும் கூடிய வைத்தியசாலையாக தெல்லிப்பழை வைத்தியசாலை இப்போதும் செயற்பட்டு வருகிற்து.நான் இருமாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது வைத்திய கலாநிதி ஒருவருடன் தற்செயலாக உரையாட முடிந்தது அவர் கூறிய செய்தி முன்னெப்போதையும் விட கடந்த இரண்டு மூன்று வருடங்களில் மனச்சிதைவுக்கு ஆளாவோர் தொகை அதிகரித்திருக்கிறது.நாட்டு நிலைமையைப் புரிந்துகொண்டவர்களுக்கு இச்செய்தி அதிர்ச்சியளிக்கப் போவதில்லை ஆனாலும் மனவருத்தமாகத் தான் இருக்கிறது.

முறையான மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் மூலமே இதனைச் சரிசெய்ய முடியும்.ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்போது இத்துறையில் ஒரேயொரு வைத்திய கலாநிதி மட்டும் தொழில்புரிகிறார்

எழுதியவர்: ஈழநாதன் — 25 September 2005 @ 10:56

4.

எவ்வளவோ அவலங்களுக்கு நடுவில் இதுவும் ஒரு அவலம். என்ன செய்வது? மனநிலை சரியாக இருக்கும் பொழுதே எவ்வளவோ காரணங்களுக்காக ஒடுக்கி, துன்புறுத்தும் சமூகம், இப்படிபட்டவர்களை வேறேப்படி நடத்தும்?

இப்படிபட்டவர்களை ஓரளவு பாதுகாப்பாக வைத்து, குணப்படுத்த முயலும் ஒரு அமைப்பு சென்னையில் இருக்கும் Banyan. இரண்டு இளம் பெண்கள் ஆரம்பித்த இந்த அமைப்பை பற்றி பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
http://www.goodnewsindia.com/Pages/content/outreach/banyan.html

எழுதியவர்: Ramya Nageswaran — 25 September 2005 @ 11:41

5.

பத்மா, உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் பதிவிலிருந்து இன்னும் தகவல்களைப் பெறக்கூடியதாகவுள்ளது.

ரயாகரன், மனநோய்க்கான காரணங்களையும், தீர்வுகளையும் நான் ஆராயவில்லை. மனநோயாளர் பற்றிய சமூகத்தின்/ஊடகங்களின்/கலை வடிவங்களின் பார்வை பற்றிய எனது மனத்தாங்கல்களையே பதிவு செய்தேன். மற்றும்படி //சமூக முரண்பாடுகளில் எற்படும் நெருக்கடிகள், தனிமனிதனுக்கு உளச்சிக்கலை எற்படுத்தும் போது, இதுவே மனச் சிதைவாக மாறுகின்றது// (”இதுவே”யை “இதுவும்”ஆக மாற்றினால்) என்ற உங்கள் கருத்துடன் மட்டும் உடன்பட முடிகிறது.

ஈழநாதன், தகவல்களுக்கு நன்றி.

ரம்யா, // மனநிலை சரியாக இருக்கும் பொழுதே எவ்வளவோ காரணங்களுக்காக ஒடுக்கி, துன்புறுத்தும் சமூகம், இப்படிபட்டவர்களை வேறெப்படி நடத்தும்?// பொருளாதாரம் சார்ந்த சமூகம் சக மனிதருடன் கொண்டுள்ள உறவை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்.

திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள்/குறிப்புகள் எழுதும் நண்பர்கள் இது விடயத்தில் திரைப்படங்களின் பார்வை/தாக்கம் குறித்தும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

எழுதியவர்: பொறுக்கி — 26 September 2005 @ 12:19

6.

மனநோயாளிகளைப் பற்றிய மாற்றுப்பார்வை அவசியம். எனக்கென்னவோ சற்று வளர்ந்த ஊர்களைப்போல அல்லாமல் இன்னும் கிராமங்களில் இவர்கள் சாதரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு,கிராம வாழ்வுக்கே உரிய நிறைகுறைகளுடன் அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. ஜெயகாந்தனின் ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ படித்திருக்கிறீர்களா?

எழுதியவர்: Thangamani — 26 September 2005 @ 12:57

7.

என் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அக்னி சாட்சி சரிதா. கணவராக நடிக்கும் சிவகுமார் ஓரளவு அனுசரணையாக இருப்பார். ஆனால் கடைசியில் அவருக்கும் பொறுமை போய்விடும்.

‘குணா’ கமல், ‘தெனாலி’ கமல், ‘ஆளவந்தான்’ கமல் போன்ற பாத்திரங்கள் எவ்வளவு தூரம் நிஜத்தின் அருகில் என்று தெரிந்து கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

எழுதியவர்: Ramya Nageswaran — 26 September 2005 @ 13:38

8.

மனநோய் பற்றி எனது கருத்தில் இதுவே மனநோய் என்பதை மறுக்கும் நீங்கள், இதுவும் என்று கூற முனைகின்றீர்கள். இங்கு உங்கள் கருத்து தவறான வகையில் உள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இங்க நீங்கள் இதுவும் என்றால் இது அல்லது வேறு ஒன்றும் மனநோயாக உள்ளது என்று கூற முனைகின்றீர்கள். அப்படி என்றால் அது எது?

இயற்கையான மூளைசார்ந்த குறைபாடுகளை நான் விவாவதற்கே எடுக்கவில்லை. நீங்கள் மனநோய் பற்றி பேசியதால், பிறபின் குறைபாட்டை இங்கு நான் உள்ளடக்கவில்லை. அது ஒரு பிறப்பு சார்ந்த குறைபாடு மட்டும்தான். இது நோயல்ல.

மனநோய் என்பது மற்றொரு உயிரிணத் தொகுயினால் உருவாவில்லை. றாக மனித சிந்தனை தளத்தில் எற்படும் நெருக்கடிகள் தான் மனநோயாக மாறுகின்றது. இது நிச்சயமாக சமூக சார்ந்த உளவியல் நெருக்கடியால் எற்படும் நோய். சிந்தனைத் தளத்தில் எற்படும் சிதைவுகள் தான் இந்த நோய். சிந்தனை சமூகம் சாhந்தவை தான். மனிதனுக்கு சிந்தனை எப்படி தோன்றுகின்றதோ, அதன் உள்ளடகத்திலேயே அது சமூகம் சார்ந்து விடுகின்றது. சமூக நெருகடிகள் தான் மனநோயக மாறுகின்றது.

தனிமனித சமூகப் போக்கு எவ்வளவுக்கு ஆழமாக விரிவடைகின்றதோ, அந்தளவுக்கு மனநோய் பெருக்கெடுக்கின்றது. தனிமனிதன் தனக்குள் தானெ இதை தீர்க்க முனையும் போதுதான், இந்த நோய் உருவாகின்றது. தனிமனித வன்முறைகள், தற்கொலைகள், பாலியல் வன்முறைகள் என பலவும் இதற்குள் தான் அடங்கும். இதற்கு வெளியில் இதுவுமாக இவை இருப்பதில்லை. இருப்பதாக கூறினால் அது பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற எல்லைக்குள் விவாதம் நகர்வதை இட்டுச் செல்லும். மனித சிந்தனையின் தோற்றவாய் பற்றிய விவாதம் இங்கு உருவாகிவிடும்.

பி.இரயாகரன்
26.09.2005

எழுதியவர்: tamilarangam — 27 September 2005 @ 05:51

9.

நீங்கள் குறிப்பிட்ட ஜெயகாந்தனின் கதை இதுவரை படிக்கக் கிடைக்கவில்லை. எப்படியாவது தேடிப் பிடிக்கின்றேன். தகவலுக்கு நன்றி தங்கமணி.

ரம்யா, கமலின் ஆளவந்தானையும் மேலேயுள்ள எனது பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். தவற விட்டுவிட்டேன்.

ரயாகரன், திரும்பவும் சொல்கிறேன். மனநோய்க்கான காரணங்களை நான் இங்கு ஆராயவில்லை. சமூக முரண்பாடுகளில் ஏற்படும் நெருக்கடிகள் மட்டுமல்ல, தனிமனித இழப்புகள், விபத்துகள்…. என்று காரணங்கள் பலவாக இருக்கின்றன. இதனை குறுக்கிவிட முடியாது என்பதையே குறிப்பிட்டேன்.

எழுதியவர்: பொறுக்கி — 27 September 2005 @ 12:48

SingharathJune 14th, 2011 at 14:08

Hey! This is my first comment here so I just wanted to tell you that I enjoy reading your articles. Can you recommend any other blogs/websites/forums that go over the same subjects? Thanks for your time!

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting