கண்காணிப்பு அரசியல்

செப்ரெம்பர் 11 அமெரிக்காவின் உலக வர்த்தக வலயத் தாக்குதலுடன் உலகமெங்கும் கலிகாலம் (பயங்கரவாதம்) தலைதூக்கிவிட்டது என்று முதலாம் உலகநாடுகள் பறை கொட்டிக்கொண்டிருக்கின்றன. இந்தப் பயங்கரவாதப் பூதத்தை அடக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்புப் போர் (Anti Terror war) என்ற பெயரில் கிழமைக்கொரு புதிய திட்டங்களையும் இந்த நாடுகள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேசமயப்படுத்தல் (Globalization) என்றோ G-8 என்றோ எந்தப் பெயரில் இந்த முதலாம் உலகத் தலைவர்கள் சந்தித்துக் கொண்டாலும் பயங்கரவாதத்தை அடக்குவதற்கான தமது புதிய கண்டுபிடிப்புகளை அறிவிப்பதுடன் இவை 100வீத திருப்தியைத் தருவதாகவும் பூரித்துப் போகிறார்கள்.

ஆனால் யதார்த்தத்தில் உலகம் முழுவதும் குண்டுகள் வெடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படியென்றால் இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எதைத்தான் சாதிக்கின்றன?

தமது சொந்தநாட்டு மக்களை முற்றுமுழுதாக கண்காணிப்பதற்கும், தமது அதிகாரங்களிற்கு அச்சுறுத்தலாயிருக்கும் உள்நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிப்பதற்குமே முஸ்லீம் பயங்கரவாத பூச்சாண்டி இந்த நாட்டு ஆளும் கும்பலால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தெரு, பொது இடங்கள், பூங்காக்கள், புகையிரத நிலையம்…. என்று சனங்கள் கூடுமிடமெல்லாம் அவர்களை 24 மணிநேரமும் கமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.

மின்தபால் வரிவரியாக வாசிக்கப்படுகிறது.

விமானத்தில் பயணம் செய்பவரின் தாத்தா, பாட்டி பிறந்த திகதியிலிருந்து அனைத்துக் குடும்ப விபரங்களும் பதிவு செய்யப்பட்டு போக இருக்கும் நாடுகளுக்கு (குறிப்பாக அமெரிக்காவுக்கு) வழங்கப்படுகிறது.

கடவுச்சீட்டில் கையடையாளம் பதிக்கப்படுகிறது.

கண்களை ஊடுருவி ஆட்களை அடையாளம் காணும் கருவிகள் அடுத்ததாக நடைமுறைக்கு வர உள்ளன.

மொத்தத்தில் கண்ணாடிக் கூண்டிற்குள் பொதுமக்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். தேசியத்தின் பெயரால், பயங்காரவாத எதிர்ப்பு என்ற பெயரால் இவையனைத்தையும் மக்களால் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டுள்ளன. கிரிமினல் அரசுகளால் அப்பாவிப் பொதுமக்கள் தமது அடிப்படை உரிமைகளையும் இழந்து கிரிமினல்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

இத்தனைக்கும் இந்த நாடுகள் தாம்தான் சனனயாகத்தின் காவலர்கள் என்றும் ஏனைய நாடுகளிலும் இந்த சனனாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென்றும் முண்டியடிக்கின்றன.

இந்த அரசாங்கங்களை விமர்சிப்பவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர். கொலிவூட் நடிகர்களுக்கு படவாய்ப்பு மறுக்கப்பட்டது. பாடகர்களுக்கு மேடை மறுக்கப்பட்டது. ஊர்வலங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு பொலிஸாரின் வன்முறை ஏவப்பட்டது. காரணங்களின்றி பலர் சிறையிலடைக்கப்பட்டனர். தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தாங்களே தங்களை தணிக்கை செய்து கொண்டன. சந்தேகப்பட்டால் யாரையும் எங்கேயும், எப்போதும் சுட்டுக் கொல்லலாம் (Shoot to kill). இவையெல்லாம் பயங்கரவாத எதிர்ப்பு நடடிக்கைகள் என்ற பெயரல்தான்.

ஸ்ராலினின் நிரவாகத்தை விமர்சித்து George Orwell எழுதிய விலங்குப் பண்ணை நாவலை நூலாகவும், காட்டுன் திரைப்படமாவும் இந்த அரசுகள் பல வழிகளிலும் வாரி வழங்கியபோது அதே George Orwellஇன் விமர்சனம் இன்று தங்களுக்கே சரியாகப் பொருந்துகிறது என்று அறிந்திருப்பார்களோ என்னவோ!!!

Technorati Tags:

கருத்து x கருத்து

கருத்து x கருத்து


Warning: Illegal string offset 'solo_subscribe' in /var/www/porukki/wp-content/plugins/subscribe-to-comments/subscribe-to-comments.php on line 304

Subscribe without commenting