சண்டியர்களின் புதுப்படம்

libya1குடும்ப ஆட்சி நடாத்தும் சர்வாதிகாரி கடாபியை பதவி விலகக் கோரி லிபிய மக்களில் ஒரு பகுதியினர் போராட ஆரம்பித்தனர். இராணுவச் சர்வாதிகாரி சும்மா இருப்பாரா அல்லது தப்பி ஓடுவாரா? பணத்தில் மிதக்கும் கடாபி தனது பலத்தை ஒன்று குவித்து தனக்கெதிரான கிளர்ச்சியை அடக்கத் தொடங்கிவிட்டார். ஆபிரிக்கர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி பணத்தைக் கொடுத்து அவர்களை சண்டையில் முன் தள்ளியுள்ளார். ஆதிகால ஆயுதங்கள் சில வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்களை அழிக்க வானிலும், தரையிலும் தனது படைகளை ஏவிவிட்டார் கடாபி. ஆயுத ரீதியில் பலமடங்கு பலமான கடாபி படைகள் தமது சொந்த மக்களையே கொன்று குவிக்கத் தொடங்கிவிட்டன.

ஊடகங்கள் இந்தச் சமநிலையற்ற யுத்தத்தை தொடர்ச்சியாக படம் பிடித்துக் காட்டின. கடாபி படையால் கிளர்ச்சியாளர்கள் அழிக்கப்படுவதையும், அவர்களுக்கு ஆதரவளித்த பொதுமக்கள் பழிவாங்கப்படப் போவதையும் சுட்டிக்காட்டி இந்த மனித அழிவிலிருந்து யார் காப்பாற்றுவார் என்று கேட்டன.

இதற்குப் பிறகும் பொறுத்திருக்கலாமா? உலகின் எந்தப் பகுதிக்கும் சனனாயகத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவை பிறகு யார் மதிப்பார்கள். ஈராக்கிலும், அப்கானிஸ்தானிலும் ஆப்பிழுத்த குரங்குகளாக இருக்கும் நிலையில் லிபியாவில் அவசரப்பட முடியாது. ஆகவே கூப்பிடு ஐக்கியநாடுகள் சபையை. அமெரிக்காவும் அதன் கூட்டுநாடுகளும் கூப்பிட்ட குரலுக்கு வராமல் ஐ.நா.வுக்கு வேறென்ன பெரிய வேலை இருக்கப் போகிறது.

libya2ஐ.நா.வும், அமெரிக்காவும், கூட்டாளிகளும் கடாபியின் விமானத்தை தடுப்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கும்போதே பிரான்ஸ் லிபியா கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்ததுடன், தனது விமானப்படையையும் லிபியாவுக்கு அனுப்பிவிட்டது. மூத்த சண்டியரை பின்னால் வந்த சண்டியர் தாண்டிப் போவதா. கொஞ்சமும் தாமதிக்காமல் அமெரிக்காவும், எப்போதும் பின்னால் இழுபடும் பிரித்தானியாவும் தமது விமானப்படையையும் அனுப்பி குண்டுமழையும் பொழிய ஆரம்பித்துவிட்டன. கிளர்ச்சியாளர்கள் இருக்கும் Benghazi பகுதிக்கு மேலால் கடாபியின் விமானங்கள் பறந்து குண்டுபோடுவதைத் தடுக்கும் தீர்மானத்தை ஐ.நா. எடுக்க, அமெரிக்காவும், பிரித்தானியாவும் Tripoliயில் குண்டுவீசத் தொடங்கிவிட்டன. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று யாரும் கேட்கப் போவதில்லை.

ஆக மொத்தத்தில் அடுத்த யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. இடங்கள் வேறாக இருந்தாலும் சண்டைக்காட்சியில் ஈடுபட்டிருப்பது அதே கதாநாயகர்கள்தான்.

அப்படியானால் கடாபியால் ஈவிரக்கமின்றி சொந்த மக்கள் கொல்லப்படுவதை அனுமதிப்பதா?

நிச்சயம் அனுமதிக்க முடியாது. ஆனால் இங்கே சட்டிக்குள்ளிருந்து தப்பி நெருப்புக்குள் விழுவதைத்தான் ஈராக்கும், அப்கானிஸ்தானும் நிரூபிக்கின்றன. இந்திய அமைதிப்படையின் இலங்கைக்கான வருகையும் இப்படித்தான் இருந்தது. இருந்த சண்டியர்களிடமிருந்து “காப்பாற்ற” வந்த சண்டியர்களும் அதே அழிவையே செய்தார்கள்.

இந்தச் சண்டியர்களின் ஒவ்வொரு மனிதாபிமானப் படையெடுப்புகளின் பின்னும் அவர்களின் நலந்தான் இருக்கிறது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. இப்போது லிபியா மீதான படையெடுப்பும் இதற்கு விதி விலக்கல்ல.

ஈராக்கின் சதாம் குசேன், அப்கானிஸ்தானின் தலிபான் போல லிபியாவின் கடாபியும் இன்றைய படையெடுப்பாளர்களின் நண்பர்தான். மலிவான விலையில் தரமான எரிபொருளை இந்த நாடுகளுக்கு விற்பவர்தான. இவர்களிடம் ஆயுதம் வாங்கும் வாடிக்கையாளரும்தான். இப்போது எதிரியாக இருப்பது அரசியலில் இதெல்லாம் சகசம் என்பது மட்டும்தானா?

libya3துனேசியாவில ஆரம்பித்து எகிப்தினூடாக மற்றைய வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்குநாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி அமெரிக்காவுக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் உவப்பானதல்ல. ஆட்டம் கண்ட மற்றும் ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் இந்த நாடுகளின் சர்வாதிகாரிகளுக்கும், மன்னர்களுக்கும் உதவுபவர்களும், நண்பர்களுமே இவர்கள்தான். இவர்களது எண்ணெய் வியாபாரத்துக்கு இப்படியான சர்வாதிகாரிகள் இருந்தால்தான் ஒருகை வியாபாரம் செய்யலாம். அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த நாடுகளை வைத்திருக்க முடியும். ஐரோப்பாவுக்குள் ஏழை நாடுகளிலிருந்து அகதிகள் வருவதையும் இவர்களைக் கொண்டே தடுத்து வர முடிந்தது.

துனேசியாவில ஆரம்பித்த மக்கள் எழுச்சியில் ஏனோதானோவென்றிருந்த சண்டியர்கள் தமது நெருங்கிய நண்பரும், இஸ்ரேலின் கூட்டாளியுமான எகிப்திய சர்வாதிகாரி துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளித்தபோதுதான் விழித்துக் கொண்டார்கள். இப்படியே விட்டால் ஒவ்வொன்றாக தங்கள் நண்பர்களை இழக்க வேண்டிவரும் என்பது தெரிந்துவிட்டது. இதைத் தடுக்க இரண்டுவிதமான வழிகளை அமைத்துக் கொண்டார்கள். மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களுக்கெதிரான எழுச்சியை அடக்க உதவுவது. அப்பிடி இப்பிடி இருக்கும் நண்பர்களுக்கு எதிரான எழுச்சியில் பேசாமல் இருப்பது, எழுச்சி பலமடைந்து வெற்றி பெறுமானால் அதற்குள் புகுந்து தமக்கு சாதகமான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவது.

யேமனிலும், பாரெனிலும் நடைபெறும் மக்கள் எழுச்சி ஆயுத முனையில் கொடூரமாக அடக்கப்படுகிறது. சவூதி அரேபியா பக்கத்து நாடுகளின் அரசைக் காப்பாற்ற தனது படைகளை அங்கே அனுப்பி மக்களை வேட்டையாடுகிறது. இதெல்லாம் ஐ.நா.வுக்கோ அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சுக்கோ மனிதாபிமானப் பிரச்சினையோ சனனாயகப் பிரச்சினையோ இல்லை. கடாபி மட்டுமே அவர்களுக்குப் பிரச்சினை.

libya4லிபியா மீதான இந்த நாடுகளின் தாக்குதல்களுக்கு அவர்களின் சொந்த நாட்டுப் பிரச்சினையும் பிரதான பங்காற்றுகின்றன. அமெரிக்காவில் சரிந்துகொண்டு போகும் ஒபாமா, பிரான்சில் செல்வாக்கிழந்துள்ள சர்க்கோர்வ்ஸ்கி, பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் கமரூன் என்று ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன.

யப்பான் நிலநடுக்கத்தின் பின்விளைவாக அணு ஆலைகள் கதிர்வீச ஆரம்பித்திருக்கின்றன. இதனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அணு மின்சாரத்துக்கு எதிரான பொதுமக்களின் குரல்கள் பலமடைய ஆரம்பித்திருகின்றன. அணு ஆலைகள் உள்ள நாடுகளில் முதலாமிடத்தில் அமெரிக்காவும் இரண்டாமிடத்தில் பிரான்சும் இருக்கின்றன. Nuclear energy lobbyயின் கூட்டாளிகளான அமெரிக்க, பிரான்ஸ் அரசுகள் இப்படி தமது மக்கள் குழம்புவதை அனுமதிப்பார்களா. அணு மின்சாரத்துக்குப் பதிலாக கடாபியைப் பற்றிக் கதைக்க வேண்டாமா.

அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் நலன்களைக் காரணம் காட்டி கடாபி போன்றவர்களின் அரச பயங்கரவாதத்துக்கும், சர்வாதிகாரத்திற்கும், மன்னராட்சிக்கும் நியாயம் கற்பித்துவிட முடியாது. இதைப் போலவே இவர்களைக் காரணம் காட்டி அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தலையில் மிளகாய் அரைப்பதையும் அனுமதிக்க முடியாது.

←Older